பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

424

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யிருந்தால்தான் அது மக்களாட்சி! இல்லையானால் கட்சி ஆட்சி-குழு ஆட்சி என்ற நிலைக்கு இழிந்து விடும்.

மக்களாட்சி முறை தோன்றிய காலத்திலிருந்தே அதன் தத்துவங்களுக்கு ஏற்ப நடந்ததில்லை. தலைவர்களும் கிடைத்ததில்லை. இன்று வரலாறு போகிற போக்கை பார்த்தால் இனி மேலும் கிடைப்பார்களா என்பது தெரியவில்லை. இனிய செல்வ, வின்ஸ்டன் சர்ச்சில் "இந்த ஜன நாயகம் மிகவும் மோசமான ஓர் அரசியல் அமைப்பு. மற்ற எல்லா முறைகளும் அதைவிட மோசமானவை என்ற ஒரே காரணத்தினால் ஏற்றுக் கொள்ளப்படும் செயல்முறை" என்று கூறினார். இன்றைய உலகில் மக்களாட்சி முறை நடைபெறும் நாடுகளின் நிகழ்ச்சிகளை உற்று நோக்கின் வின்ஸ்டன் சர்ச்சிலின் கூற்று உண்மையாகி வருகிறது.

இனிய செல்வ, ஜனநாயகத்திற்குப் பேர் போன அமெரிக்காவில் இனக் கலவரம், சோவியத் ஒன்றியம் உருவத்தையே இழந்து விட்டது! இந்திய மக்களாட்சி முறைத் தோற்றத்தினைக் காட்டித் தனி நபர் வழிபாட்டுத் திசையிலும் குழூஉ ஆட்சி முறையிலும் வெகுவேகமாக முன்னேறி வருகிறது. இவையெல்லாம் வருந்தத்தக்க செய்திகள்!

மக்கள் மன்றத்திலும் பேச்சுரிமை, போராட்ட உரிமை போன்றவைகள் தவறான முறையிலேயே பயன்படுத்தப் படுகின்றன. இனிய செல்வ, இந்தச் சூழ்நிலைகளைப் பார்க்கும் பொழுது ஜனநாயகக் கோட்பாடுகள் வளரும் நம்பிக்கை அறவே இல்லை. ஆதலால், நாம்தான் இந்த ஜனநாயக முறைகளைத் தாங்கிக் கொள்ள நம்மைப் பக்குவப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று புலப்படுகிறது.

"உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்"

என்று தானே திருவள்ளுவர் கூறினார்.

இன்ப அன்பு
அடிகளார்