பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

426

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முறையாக நடைபெறத் தொடர்ந்து கலந்து பேசுதல், விவாதித்தல் ஆகியன நிகழ்ந்து தெளிவுண்டாகும் நிலையில் ஒரு கருத்து உருவாக வேண்டும். அங்ஙனம் ஒரு கருத்து உருவாகாது போனால் தொடர்ந்து, உள் நோக்கமும் பகைமை உணர்வுமின்றி விவாதம் நடந்து கொண்டே இருக்க வேண்டும். கருத்துப் பரிமாற்றத்திற்குரியத் தற்சார்பும் தன் முனைப்பும் இன்றி, மற்றவர் கருத்து சரியெனப்பட்டால் உடன்படுதல் வேண்டும். இந்த நிலையில் தான் கருத்துப் பரிமாற்றம் வெற்றி பெறுகிறது. ஜனநாயக வாழ்க்கையில் கருத்துப் பரிமாற்றத்தில் பங்கேற்போர் ஒரு கருத்துக்குரியவர்கள் யார் என்று காணல் ஆகாது, கூடாது. கருத்துள் உள்ள நல்ல கூறுகளையே எண்ணுதல் வேண்டும். பூனையைப் பார்த்தால் புனுகின் மணத்தை அனுபவிக்க இயலுமா? புனுகுதான் அனுபவத்திற்குரியது. ஒன்றுக்கும் ஆகாத நத்தைச் சிப்பியில்தான் முத்து தோன்றுகிறது. முத்தையே முதலாகக் கொள்க! இதனைத் திருவள்ளுவர்,

"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"

என்று கூறி விளக்குகிறார்! இந்தக் குறள் ஜனநாயக வாழ்க்கையின் அடிப்படையாகும். ஜனநாயக வாழ்க்கையில் சொல்பவர் யார் என்பது முக்கியமல்ல. சொல்லப்படும் கருத்துக்களே கவனத்திற்குரியன, கருதுதற்குரியன.

கருத்துலகில் தாக்குப்பிடித்து நிற்க இயலாதவர்கள் பிடிவாதம் கொள்வர். மாற்றுக் கருத்துக் கூறுவோர்களைப் பகைவர்களாகக் கருதுவர். இதனில் சிந்தனை உலகத்தில் - கருத்துலகத்தில் தேக்கம்! வளர்ச்சி இல்லை.

இன்று நமது பாராளுமன்றம், சட்டமன்றங்களில் கூட ஜனநாயக மரபுகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. இந்த வளாகங்களிலேயே வன்முறைகள் இடம்பெறத் தொடங்கிவிட்டன. இது வருந்தத் தக்கது! நாடு முழுதும்