பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தன்னுடைய தாயே காரணம், என்று கூறுகின்றார். மக்களாவதும் - மாக்களாவதும் பெற்றோர்களின் பொறுப் பேயாம்.

ஆதலால், மனையறம் வாழ்வோர்-மகப்பேற்றுக்குரிய வாழ்வு வாழ்வோர் வாழ்வாங்கு வாழ வேண்டும். அறிவறிந்த பெற்றோர்களே அறிவறிந்த மக்களைத் தருகின்றனர் என்பதே வள்ளுவம்.

7. வளரும் தலைமுறை

வரலாற்று ஆசிரியன் சென்ற காலத் தலைமுறைகளை விவரித்துப் பேசுவான். ஆனால் இலக்கியப் படைப்பாளன் எதிர்வரும் தலைமுறையினரைப் பற்றிச் சிந்திப்பான்; எழுதுவான். எப்போதும் அறிஞர்களுடைய கவலை அடுத்த தலைமுறையைப் பற்றியதாகவே அமையும். திருக்குறள் ஒரு முழுதுறழ் இலக்கியம்; அறநூல்; வாழ்க்கை நூல். ஆதலால் திருக்குறள் எதிர்காலத் தலைமுறையினரைப் பற்றிப் பேசுவது வியப்பல்ல. அதுமட்டுமல்ல இன்று வாழ்பவர்களுக்கு எதிர் காலத்தைச் சிறப்புற அமையச் செய்யவேண்டிய பொறுப்பை ஏற்கும்படி வலியுறுத்துகிறது.

இன்று வாழ்வோரின் கடமை, இவர்கள் வாழ்ந்து முடிப்பது மட்டுமல்ல; அடுத்து வரும் தலைமுறையினர் சிறப்போடு வாழ்தலுக்குரிய சூழலை உருவாக்கித் தர வேண்டும் என்பது திருக்குறளின் கருத்து; முடிவும்கூட மனையற வாழ்க்கையின் மாண்பு, காதல் சிறப்பில் இல்லை; சுவைமிக்க உணவில் இல்லை; செய்து குவித்த பொருளில் இல்லை. வேறு எதில்தான் இருக்கிறது மனையறத்தின் சிறப்பு? ஆம்! அறிவறிந்த மக்களைப் பெறுவதில்தான், மனையறத்தின் மாண்பு பொருந்தியிருக்கிறது.

"பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற"

(61)