பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



435



இனிய செல்வ, ஆய்வு செய்ய வேண்டும். போதிக்கும் ஒழுக்க நெறி உயர்ந்ததாக இருக்கலாம். மிக உயர்ந்தவர்கள் கூட ஒழுக்க நெறிகளைப்பற்றி உபதேசிக்கலாம். ஆனால், நடைமுறை எப்படி இருக்கிறது? ஏன் இந்த நிலை? திருவள்ளுவர் மிக மிக உயர்ந்த நிலையில் இருந்து கொண்டு மக்கள் சமூகத்தைப் புரிந்துகொள்ளாமல் ஒழுக்க நெறிகளை உபதேசித்துள்ளாரா? இந்த வினாக்கள் அண்மைக் காலமாக அடிக்கடி எழுகின்றன!

திருக்குறள் ஒரு இலட்சிய நூலே! நடைமுறைக்கிசைந்த வாழ்க்கை நூலல்ல! இனிய செல்வ, நீ சொல்வது புரிகிறது! ஆயினும் மக்களின் நிலைக் கேற்பவும் அறம் கூறமுடியாது; ஒழுக்க நெறி கூறமுடியாது. ஆயினும் பள்ளத்தில் கிடப்பவரை எழுப்பிக் கொணர வேண்டாமா? படிமுறை வளர்ச்சிதான் சாத்தியம்! சுத்த நீதியும் மக்கள் மன்றத்தில் எடுபடாது. திருவள்ளுவருக்கு இது தெரியும்.

"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்”

(314)

என்ற திருக்குறளில் பழி வாங்கும் உணர்வுடைய மனிதர்களுடன் திருவள்ளுவர் கூடவே போகிறார் என்பதை "ஒறுத்தல்" "அவர்நாண" என்ற சொற்கள் புலப்படுத்துகின்றன. ஆயினும் பல்வேறு திருக்குறளைப் பார்க்கும்போது திருக்குறள் வாழ்க்கை நூலாதல் இயலுமா என்ற வினா எழும்பாமல் இருக்காது.

இனிய செல்வ, இன்றைய நமது நாட்டின் போக்கில் யாருக்காவது கோபம் வராமல் இருக்குமா? எங்குப் பார்த்தாலும் வன்முறை! இழிவான பேச்சு! பழிதூற்றல்! உப்புக்கும் பெறாத செய்திகளுக்கும் போராட்டங்கள்! அறமல்லாதவற்றிற்கும்கூட, "கூட்டம் கூடி”ப் போராடுகின்றனர், சுயநலத்தின் அடிப்படையில்! இன்று யாருக்கும் வேலை செய்ய விருப்பமில்லை! இந்த நெறியல்லா நெறி வழிச் செல்லும் மக்கள்மீது நமக்குக் கோபம் வரவேண்டாமா?