பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

436

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இனிய செல்வ, திருவள்ளுவர் என்ன அவர் சொன்னபடி வாழ்ந்தனரா? "செத்தாருள் வைக்கப்படும்” என்று கூறியல்லவா திட்டுகிறார்!

இனிய செல்வ, ஆழமாகச் சிந்திக்க வேண்டும். சிந்திக்க விருப்பமே! ஆனாலும், சூழ்நிலை பாதிக்கிறது! பொறுத்தால் கோழையாகி விடுவோமோ என்ற அச்சம் மேலிடுகிறது! நாளெல்லாம் கொலை, பொழுதெல்லாம் கொள்ளை என்ற நிலை நாட்டில்! நிர்வாணமான சுயநலம் அரங்கேறுகிறது; ஆத்தான மண்டபம் ஏறுகிறது. இந்தச் சூழ்நிலையில் பொறையுடைமைப் பண்டை ஏற்க முடியுமா? பொறையுடைமை மேற்கொண்டு ஒழுக இயலுமா? இனிய செல்வ, இந்தப் போராட்டம் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. ஆயினும் திருவள்ளுவரின் சொல்லாட்சி முறை, பொருள் வைப்பு முறை நம்மைச் சிந்திக்க வைக்கத் துரண்டுகிறது.

ஒருவர் நம்மைப் பழி தூற்றுகிறார்! இல்லாதன, பொல்லாதனவெல்லாம் கூறுகிறார்! நமக்கே கேட்டுக் கொண்டிருக்க இயலாத நிலையில் ஆத்திரம் மேலிடுகிறது! இனிய செல்வ, என்ன செய்வது? திருவள்ளுவரின் ஆலோசனை பொறுத்துக் கொள்! துறவியைப் போலப் பொறுத்துக் கொள் என்பது. ஏன்? உன்னைப் பழிதூற்றுவோர் யார்? நல்லவர்கள் அல்ல; பிழைப்பவர்கள்; தகுதியில்லாதவர்கள்! அவர்கள் பேச்சுக்குக் கவலைப்படுவானேன்? கதிரவன் நாய் குரைப்புக்காக ஞாலம் சுற்றி வருவதைத் தவிர்க்கிறதா? அல்லது விரைந்தோடும் ஊர்தி, குரைத்துக்கொண்டு வரும் நாயைக் கண்டு நின்று விடுகிறதா? ஒன்றும் நடப்பதில்லை! நெறியின் நீங்கியோர், நன்மையை நன்மை என்று அறியாதார், நன்று தீது தேர்ந்து தெளியும் அறிவிலாதார் - இவர்கள் மூர்க்கர்கள்! சொந்த புத்தியும் இல்லாதவர்கள், சொற்புத்தியும் ஏற்றுக்கொள்ளாதவர்கள். அவர்கள் பேதையர்; கொண்டதை விடார்! அவர்களிடம் சொல்லும் எதையும் கேளார். கல்லில் முளையடித்த முயற்சி போல் பாழே.