பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

442

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கூட்டப்பெற்றது. அந்த மாநாட்டில் முத்தமிழ்க் ‘காவலர், சிலம்புச் செல்வர், தமிழ் மறவர் சி. இலக்குவனார் ஆகியோருடன் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டின் பங்கேற்பாளர்கள் நூறு பேர்; மாநாடு நன்றாக நடந்தது; இடையில் சி. இலக்குவனார் மாநாட்டிலிருந்து வெளிநடப்புச் செய்துவிட்டார்! இனிய செல்வ, ஏன் அவசரப்படுகிறாய்? சொல்ல வந்ததை முழுதும் சொல்லாமல் விட இயலுமா? இந்தி எதிர்ப்புணர்ச்சிக்குக் காட்டும் ஆர்வத்தைத் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது மாநாட்டின் முடிபு. இந்த மாநாட்டில் கல்லை, தே.கண்ணன் அவர்களும் கலந்து கொண்டார். மாநாட்டுப் பேராளர்கள் வருவதற்கு இடையூறாக தமிழ்நாடு அரசு ஒற்றர் பிரிவைச் சேர்ந்த காவலர்கள் வந்து மடத்தைக் கண்காணித்தனர். இதனால், கல்லை, தே.கண்ணன் அவர்கள் சில தொல்லைகளுக்கும் ஆளானார்; ஆனால், கடுமையாகப் பாதித்து விடவில்லை.

இனிய செல்வ, கல்லை. தே.கண்ணன் அவர்கள் தாம் ஒய்வு பெற்ற பிறகு "வள்ளுவர் வழி” இதழைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்தக் காலத்தில் ஒர் இலக்கிய இதழை இழப்பில்லாமல் நடத்த முடியுமா? மிகுந்த இடர்பர்டுகளுக்கிடையில் நடத்தி வருகிறார். அவரே இதழ்களை மடித்து அஞ்சல் செய்து வருகிறார். இனிய செல்வ, நாமெல்லாம் முயன்று அவருடைய இழப்பை ஈடு செய்ய வேண்டும். இது நமது கடமை! இனிய செல்வ, கல்லை, தே.கண்ணன் அவர்கள் திருக்குறள் விருதினைப் பெற்றுள்ளார்.

"நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு"

என்ற திருக்குறள் நெறிதான் இந்த விருதினைப் பெறத்துணை செய்தது; கல்லை. தே.கண்ணன் அவர்கள் நீதியை விரும்புபவர். அறத்தையும் 'அறம்' என்றே சிறப்பித்துக் கூறப்பெறும் திருக்குறளையும் விரும்புவர். அது மட்டுமா?