பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

444

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அவர்கள் நோய் போன்றவர்கள் என்று திருவள்ளுவர் கூறுகின்றார். இனிய செல்வ, இனிப்பு சுவையுடையது. கசப்புச் சுவையுடைய எட்டிக் காயை மறைவாகத் தேனில் ஊறப்போட்டால் எட்டிக்காய் இனிக்குமா, என்ன? ஒரு பொழுதும் இனிக்காது. ஏன்? கரியைப் பால் விட்டுக் கழுவினால் கரி வெள்ளையாகிவிடுமா, என்ன? ஒரு பொழுதும் வெள்ளை ஆகாது. அதுபோலத்தான் கயவர்கள் நிலை; கயவர்கள் சொல்லப் பயன்படார்.

இனிய செல்வ, இன்று எங்கும் கயமைத்தனமே மேவி வளர்ந்து வருகிறது. எந்த ஒன்றும் முறையாக நடப்பதில்லை. நடக்க வேண்டும் என்ற விருப்பமும் பலருக்கு இல்லை! இனிய செல்வ, நாடு தழுவிய, நிலையில் வளர்ந்துள்ள இந்த அநாகரிகத்தை எப்படிச் சந்திப்பது? யார் சந்திப்பது? மக்களாட்சிமுறை உள்ள நாட்டில் சட்டமே ஆட்சி செய்கிறது என்ற கோட்பாடுள்ளது. மக்கள்தான் விழிப்புணர்வு பெறவேண்டும். இனிய செல்வ, நமது நாடு-மக்கள் சக்தி சிந்திக்கத் தலைப்படுதல் வேண்டும். சிந்தித்தவைகளைத் தக்காருடன் கலந்து பேசவேண்டும். மனம்விட்டு விவாதிக்க வேண்டும்; தெளிந்த முடிவினை எடுக்க வேண்டும்; முடிவுகள் மீது செயற்பாட்டுக்கு வரவேண்டும்; இனிய செல்வ, மக்களில் இப்படி இருப்போர் எண்ணிக்கை குறைவு? இங்ஙனம் செயற்படுத்த இயலாவண்ணம் நிற்போருக்கு யார் துணை? கொடினுடைக்கும் பணியைத் தொடக்க வேண்டியது தான்! .

"இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு”

(987)

என்று கூறும் திருக்குறளிலேயே கயமை அதிகாரமும் வருகிறது. இனிய செல்வ, இன்னாதன செய்தல் வேறு. கயமைத்தனம் வேறு! கயமை என்பது சின்னத்தனம்! உள்ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுதல்! அள்ளிச் சாப்பிட்ட கை, ஈரம் காய்வதற்கு முன்பே சோறிட்டவரை