பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

452

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேண்டும். ஒருவரின்றேல் ஒருவர் இல்லை என்றிருக்க வேண்டும். இதுவே நட்புத் தோழமை!

நண்பன் ஏன்? கூட்டாளி ஏன்? அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும்! ஆக்கத்திற்குத் துணை செய்ய வேண்டும். இதற்காகவே நட்பு தோழமை கூட்டாளி அலுவலர்! எந்தப் பெயரால் கூறினால் என்ன? நம்முடன் நம்மைச் சார்ந்து வாழ்பவர்கள், நமக்கும் சார்பாக இருப்பவர்கள் இவர்கள்தான் அழிவிற்கும் பொறுப்பு! ஆக்கத்திற்கும் பொறுப்பு! இனிய செல்வ, அழிவிலிருந்து காக்க முடியவில்லை, ஆக்கமும் தரமுடியவில்லை என்றே வைத்துக் கொள்! அப்போது தப்பித்து ஓடுபவன் ஒருவருள் ஒருவராய் வாழ்ந்தது உண்மையல்ல. அது வெறும் நடிப்பு. ஒதுங்கி நிற்கிறான் என்றால் அவன் நண்பனாய்க் காட்டியதெல்லாம் தோல்பாவைக் கூத்தாட்டம் போலத்தான்! பின் யார் உண்மையான கூட்டாளி? நண்பன்? தோழன்? கேடு வந்தவிடத்தும் அக்கேட்டினை நாம் அனுபவிக்கும் பொழுதும் நம்முடன் இருந்து துன்பத்தை அனுபவித்து உழல்கின்றானே அவன் தான் நண்பன்! தோழன்! கூட்டாளி! சுந்தரர்-பரவையின் பிரிவு தவிர்க்க முடியாததாயிற்று! ஆயினும் அப்பிரிவினைத் தவிர்க்க சுந்தரருடன் இருந்த திருவாரூர் வீதியில் நள்ளிரவில் நடந்து உழன்றானே சிவபெருமான்! அது நட்பு தோழமை!

இனிய செல்வ, இன்று எங்கு பார்த்தாலும் கூட்டம்! கூடி வாழ்வது போலத் தெரிகிறது! ஆனால், பரஸ்பரம் நம்பிக்கையில்லை. கட்சி என்றாலே கூட்டாய்வு என்று பெயர். ஆனால், இன்றைய கட்சிகளின் வடிவம் ஜனநாயகம். ஆனால், நடைமுறையில் தனி நாயக நாகரிகம்! பண நாகரிகம்! எல்லாம் ஒருவரே! இது! இன்றைய அரசியல் போக்கு! ஆளுங்கட்சிக்கு ஒரு தலைவர். இதுதான் நடைமுறை! இந்த நடைமுறைக்கு இன்று ஓய்வு கொடுத்தாகி விட்டது. ஏன்? பரஸ்பரம் நம்பிக்கையில்லை. நாற்காலிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம்! அதுமட்டுமா? இன்று