பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



453


கட்சிகளில் பொருளாளர்கள் உண்டு. ஆனால், பொருள் இல்லாத பொருளாளர்கள். பொருள் முழுவதும் தலைவர் வசம்! பலராய்க் கூடி இருப்பதாகக் காட்சி! ஆனால், தனி ஒருவர்தான் எல்லாம்! ஏன் இந்த நிலை! நிறுவனங்கள், கிராமங்களில் கூட பார்க்கலாம்! கூட்டமாக வாழ்கிறார்கள். ஆனால் கூட்டுணர்வு இல்லை! கூட்டம்! அஃது ஒரு கும்பல்! கூட்டம் கூட்டுவது எளிது! ஆனால், அந்தக் கூட்டத்தினை உணர்வால், உயிர்ப்பால் செயலால் ஒன்றுபடச் செய்தல் எளிதன்று. இனிய செல்வ, அதுவும் இந்தியர்களுக்கிடையில் சாத்தியமல்ல. இந்தியர்கள் தனியே இருந்தால் நல்லவர்கள். கூட்டமாக கூடிவிட்டால் அராஜகம்தான்! நாம் கூட்டு வாழ்க்கைக்கே தகுதியற்றவர்கள். பூமியில் தானே வாழ்கின்றோம். பூமி தன்னைத்தானே சுற்றி வருவது போல நாமும் நம்மை நாமே சுற்றி வருகிறோம். நாடு, ஊர், பாராளுமன்றம், சட்டசபை, பஞ்சாயத்து என்றெல்லாம் அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகள் அனைத்தம் பலர் கூடி வாழ்வதற்குத்தான்; கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்வதற்காகத்தான்! நடப்பு அப்படியல்ல.

இனிய செல்வ, எங்கே உண்மையான கூட்டுறவு இல்லையோ, அங்கே ஒரு கும்பல்தான் இருக்கும், இந்தக் கும்பல் பயனற்றது! உண்மையான நட்பு, தோழமை இருந்தால் சிந்தனையில், செயலில் பெருக்கம் இருக்கும்; ஒரோவழி அல்லற்பட்டு ஆற்றாது உழல வேண்டியிருப்பினும் நம்முடன் நமது துன்பத்திலும் பங்கேற்று உழல்வார்கள். 'இதனால் துன்பத்தின் தாக்கம்-பாதிப்புக் குறையும்! கவலை குறையும்’ போர்க்குணம் தோன்றும்! வளரும்! வாழும் துடிப்புத் தோன்றும்! இதற்கே கூட்டு! நட்பு! தோழமை! இன்று எங்கே தேடுவது கூட்டாளியை? சமூகத்தின் மாற்றங்கள் ஏற்பட்டாலே நட்புக் கிடைக்கும்! தோழமை கிடைக்கும்! பிழைப்பு நடத்தக் கூடாது, வாழ்தல் வேண்டும் என்ற உணர்வு சிறக்க வேண்டும். ‘இரண்டு நல்லது; இரட்டை வடம் நல்லது! ஆனால் இரட்டைப் போக்கு உள்ளவரை