பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



455


பின் செல்வத்தைத் தேடுவதும் ஆகாது. ஏன்? அரசுக்கு மட்டும் அல்ல. தனி நபர்களுக்கும் கூடச் செலவு வந்தபின் செல்வம் தேடினால் வரவு குறையும்; உள்ள நிலை பாதிக்கும்; அமைதி குறையும். இனிய செல்வ, செல்வத்தை ஈட்டித் தொகுத்துக் காத்த பிறகு அச் செல்வத்திற்குரிய செலவுத் திட்டம் தயாரித்துச் செலவழிக்க வேண்டும்.

இனிய செல்வ, அரசு பல்வேறு பொறுப்புக்கள் உடையது. ஆதலால் பல்வேறு பொறுப்புக்களை நிறைவேற்றும் வகையில் செலவுக்குத் திட்டமிடுதல் வேண்டும். அரசின் பொறுப்பு பெரியது ஆதலால் செலவில் ஆழ்ந்த சிந்தனையும் திட்டமிடும் பாங்கும் தேவை. இன்றைய அரசின் பொருளாதாரக் கொள்கை திருக்குறட் பொருளாதாரத்துடன் ஒத்துப்போகிறதா? இல்லை! இல்லை! அர்சு தனது வருவாய்க்காகத் தனது மக்களைக் குடிகாரனாக்குகிறது; அத்திட்டத்தை நம்பி வாழும் ஏமாளியாக்கப் பரிசுச் சீட்டு விற்கிறது. இவை அரசின் கடமையொடு சார்ந்த வரவு வாயில்கள் அல்ல. "நல்நடை நல்குதல் வேந்தர்க்குக் கடனே.” என்பதற்கு, இன்றைய அரசுகளின் நிதிநிலை மூலதனத் திரட்சியைப் பெறுவதில்லை. இஃது ஒரு பெரிய குறை.

அடுத்து, நாட்டின் தேவைக்கு ஏற்ப அரசு பொருள் திரட்டுவதில்லை. அதனால் பற்றாக்குறை விழுகிறது, பற்றாக் குறை மட்டுமா? அரசின் நிலையான செலவினங்களுக்கும் போதிய நிதி ஆதாரங்களைத் தேடாமையால் அரசின் பல துறைகளில் பணி இடங்கள் நிரப்பப்படாமலும் போதிய வசதிகள் இல்லாமலும் காலந்தள்ளப்படுகிறது. குறிப்பாகக் கல்வித் துறையைக் கூறலாம். அரசுகள் திட்டக்குழுக்கள் வைத்துள்ளன. ஆயினும், வீண் செலவுகளைத் தவிர்த்த பாடில்லை. குடியரசுகள் இராஜரீக அரசுகளாக மாறி வருகின்றன, பொதுத்துறைகளில் ஒரு சில இழப்புக்கள் தாம்! ஏன் இழப்பு? இனிய செல்வ! பொதுத்துறை, அரசியல்வாதிகள் புகுந்து விளையாடும் இடம்! நிர்வாகத் தலையீடு! அதனால் இழப்பு! பொதுத்துறையை இழப்பு என்று காரணம்