பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

458

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இனிய செல்வ, மனிதன் சமுதாயத்தில் ஒரு உறுப்பினன். குடியில் பிறந்து சிறந்து விளங்கும் இயல்வு தேவை. எந்த நாட்டில் குடியாண்மை அதாவது தாம் பிறந்து வளர்ந்த குடியை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வலர்கள் இல்லையோ, அந்த நாட்டில் வறுமை குடிகொள்ளும். இனிய செல்வ, நமது நாடு வளமான நாடு! ஆனால், நமது நாட்டு மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள்! இந்த நாட்டில் தான் இலர் பலர்; உடையவர் சிலர். ஏன் இந்த அவலநிலை! நோற்பவர் சிலர், நோலாதவர் பலர். ஆம்! பிறர் நலத்துக்கென முயல்வது நோன்பு. இந்த நோன்பு நோற்பார் யார்? நோற்பவர்களைப் பைத்தியக்காரர்களாக ஆக்குபவர்களே இன்று மிகுதி. இங்ஙணம் நோற்பதை-வாழ்வதை ஒப்புரவு என்று திருக்குறள் கூறுகிறது. இனிய செல்வ, திருக்குறள் கூறும் குடியாண்மை நம்மிடத்தில் இருந்தால் நமக்குச் சுற்றம் தழீஇய வாழ்க்கை வந்தமையும். இன்று இது இல்லை! ஏன் இல்லை! சுயநலமே காரணம். இந்த உலகில் ஏராளமான உணவுப் பண்டங்கள்! இந்த உலகத்து மக்கள் அனைவரும் உண்டு வாழலாம்! ஆனாலும் உணவுப் பஞ்சம் இருக்கிறது! ஏன்? ஓரிருவர் குவித்து வைத்துக்கொண்டு கொள்ளை லாபத்துக்கு விற்கின்றனர். இனிய செல்வ, அப்படி விற்பதிலுங் கூடக் கலப்படம்! மற்றவர் வேதனையைப் பற்றிக் கவலைப்படாத பிறவிகள்! இவர்கள் இந்த நிலக்குப் பொறையாவர்.

இங்ஙனம் சமுதாயம் சீர் கெட யாது காரணம்? விழிப்புடன் இருந்து புல்லுருவிகளை அகற்றாமையே காரணமாகும். இனிய செல்வ, தமிழ்க் குடியில் வறுமை குடியேறிப் பலநூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. பசிக்குத் தேடிக் கையேந்தி வாங்கி உண்டு பிழைத்திருக்கின்றனர். திருவள்ளுவர் காலத்திலேயே இரந்து வாழும் வாழ்க்கை வந்து விட்டது. அது மட்டுமா? பல் குழுவாகப் பிரிந்து பாழ் செய்யும் உட்பகையால் கலகம் செய்து கொண்டு செத்துள்ளனர். இந்த அவலம் எப்போது அகலும்? நமது தமிழ்க்குடி மரபினர்