பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



459


என்று வறுமையிலிருந்து மீட்டெடுக்கப்படுவர்? நமது தமிழ்க்குடியில் எவன் ஒருவன் தன் சோம்பலை உதறித் தள்ளிவிட்டு ஆளுமையுடன் குடி செயற்பணிக்கு முன்வருகிறானோ அப்போது குடியாண்மை உருவாகும்; குடியாண்மை வளரும். தமிழ்க்குடியில் உள்ள குற்றங்களும் நீங்கும்!

இனிய செல்வ, சோம்பலால் குடி கெடுகிறது. அதனால் தானே புறநானூற்றுப் புலவர் "எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே” என்றார். இன்றைய தமிழகத்திற்குக் குடியாண்மையுடையோர் தேவை.

"குடி மடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட வுற்றி லவர்க்கு

(604)
இன்ப அன்பு
அடிகளார்
79. குடிசெய்வார் இயல்பு

இனிய செல்வ,

திருக்குறள் பொது மறை! உலகப் பொது மறை! ஆயினும் ஒருவன் தான் பிறந்த குடியை வளர்க்க வேண்டும்; காக்கவேண்டும் என்று திருக்குறள் கூறுகிறது. நிலப்பரப்பு அளவில் பெரியது. வேளாண்மை செய்யும் பொழுது பாத்தி பிரித்து வரப்பெடுத்துக் கட்டி நீர் கட்டினால் தான் வேளாண்மைத் தொழில் வெற்றி பெறும். அதுபோல் உலகம்-மக்கள் தொகுதி அளவில் கூடியது. நாடும் கடலும் இடையில் கிடப்பது. எனவே மக்களையும் பகுதியாய் பிரித்து எடுத்து வளர்த்தலே எளிது; நடைமுறைக்குரியது. மக்கள் தொகுதியின் அடிப்படை பகுப்பு குடி! குருதிச் சார்புடையது! அதற்கு அடிப்படை குடும்பம், சுற்றம்! குடி என்பது மொழியின் அடிப்படையிலானது என்றும் கொள்ளலாம். இனிய செல்வ, குருதி வழி அமைவது என்று கொண்டாலும் தவறில்லை.