பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

464

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அறிவியல் வளர்கிறது என்கிறார்கள்! நமக்கு என்னவோ இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை! கடந்த காலத்தைப் போல, நம்முடைய முன்னோர்களைப்போல நாம் என்ன செய்திருக்கின்றோம்? செய்கின்றோம்? காவிரியில் கரிகாலன் அணை கட்டினான்! மிகுதி நீரை வாங்கக் கொள்ளிடம் ஆற்றினை அகலமும் உயர் கரைகளும் உடையதாக அமைத்தான். கல்லணை உடையவில்லையே! நாம் கட்டிய குடகனாறு அணை உடைந்துவிட்டதே! பழங்காலக் கோயில்களைக் காண்க! விண்ணளந்து காட்டி வானை மறைக்கும் திருக்கோயில்கள்! இன்று சத்துணவுக்கூடம் அமைக்கக் கூட-அதுவும் அளவில் சிறியது; சிமெண்டு பலகையில் ஆனது-முழங்கால் போடுகிறோம். ஏன் இந்த அவலம்? இலக்கியத்திலும் தான் என்ன பெரிய சாதனை? "காக்கா கருப்பு தான்!”

இனிய செல்வ, திருவள்ளுவர் மழையைப் பற்றிக் கூறும்பொழுது,

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

என்று கூறினார். இன்று மழை நம்மைக் கெடுத்துவிட்டது. பல நூறு கோடி ரூபாய்களுக்கு இழப்பு: உயிரிழப்பு: இழப்புகளுக்கிடையில் ஒரு மகிழ்ச்சி. எல்லா ஏரிகளிலும் கண்மாய்களிலும் தண்ணீர் நிரம்பி வழிவது நம்பிக்கையைத் தருகிறது. கழனிகள் விளையும். இரண்டாண்டுகளுக்குப் பஞ்சம் இல்லை! விவசாயிகளிடம் பணம் புழங்கும். திருவள்ளுவரின் திருக்குறள் மழையைப் பொறுத்தவரையில் உண்மையாகிவிட்டது. ஆனால், நமது வாழ்க்கைமுறை பெய்யும் மழையை முழுதாகப் பயன்படுத்தக் கூடியதாக அமையவில்லையே என்ற ஏக்கம் வரும்பொழுது பெருமூச்சு வருகிறது.

இனிய செல்வ, குடிமக்கள் ஏரி, குளங்களைக் குடி ஊழியம் அடிப்படையில் பாதுகாக்கும் பண்பு வளர