பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

466

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நனைய மழை பெய்யும்! மண் வளம் மரங்களுக்கு ஆக்கம்; மரங்களின் செழிப்பு மண்ணிற்கு ஆக்கம்; இவ்விரண்டையும் கண்டு கார்மேகக்கன்னி சூல்தாங்கி சூழ்ந்து வந்து பெய்வாள். மழை! மாமழையால் கிடைக்கும் மழை நீரை ஏரிக்கரை உயர்த்தி தேக்கி வைத்தால் ஏரி நிறைந்த செல்வம் சேர்த்துச் சேமமுற வாழலாம்!

இன்ப அன்பு
அடிகளார்
81. டங்கல் ஒப்பந்தம்

இனிய செல்வ,

ஊரும் உலகமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. விரிவடைய விரிவடைய விசாலமான புத்தி வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் இன்றைய நடப்பு அப்படியில்லை. ஊரில் நடக்கும் போட்டா போட்டி, ஆதிக்கங்கள், அமுக்கங்கள் ஆகிய எல்லாமே உலகத்திலும் நடக்கின்றன.

இனிய செல்வ, டங்கல் ஒப்பந்தம் பற்றிப் பேசுகிறார்கள். ஆதரித்தும் பேசுகிறார்கள்; எதிர்த்தும் பேசுகிறார்கள். இனிய செல்வ, நமது நிலை என்ன?

நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை

என்ற திருக்குறள் நெறிதான்! பொதுவாக டங்கல் ஒப்பந்தத்தை உலக நாடுகள் முழுதும் ஏற்றுக் கொண்டுள்ளன. ஏன்? சீனாகூட விரும்புகிறது. இந்த வகையில் அமெரிக்காவின் உலகந்தழீஇய ஒட்பம் வெற்றி பெற்றுள்ளது.

இனிய செல்வ, டங்கல் ஒப்பந்தத்தில் உள்ள ஒரு பெரிய பயன் எல்லா நாடுகளுக்கும் எந்த விதமான தடையுமின்றி உலகச் சந்தை திறந்து விடப்பெற்றுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி உரிமங்கள் இல்லை; வரிகள் இல்லை, இஃதோர் அனுகூலமான செய்தி. ஆனால், இந்தப் பொதுவிதி நமது நாட்டுக்கு ஒத்து வருமா? நமது நாடு மக்கள்தொகை பெருகிய