பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

468

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நாடு. ஆனால் இன்று ஜப்பான் நாடே நுகர் பொருள் உலகச் சந்தையில் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.

இனிய செல்வ, ஒப்பந்தம் சரியானதா? தவறானதா? என்பதை விட நமது நிலையில் வளர்ச்சி வேண்டும் என்பதே உண்மை.

இன்ப அன்பு
அடிகளார்
82. விலை ஏற்றம்

இனிய செல்வ,

இந்தியாவில் இரவு-பகல் எப்போதுமே தூங்காமல் இடையீடின்றி உயர்வது எது? ஆம்! நூற்றுக்கு நூறு சரி! எப்போதும் தூங்காமல் ஏறுவது வட்டி. வட்டி உயர்வு உலக நாடுகளுக்கும் பொருந்தும். ஆனால் பல உலக நாடுகளில் இல்லாத ஒன்று விலை உயர்வு. இனிய செல்வ, நமது நாட்டில் விலை உயர்வு எப்படி? பல நாடுகளில் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் குழுக்கள் உள்ளன. இனிய செல்வ, 1982-ல் நாம் சீனக் குடியரசுக்குச் சென்றிருந்தபோது விசாரித்ததில் "கடந்த 10 ஆண்டுகளாக விலை ஏற்றமே இல்லை. ஒரே நிலையில் விலை இருக்கிறது" என்றனர். நாட்டளவில் விலைக் கட்டுப்பாட்டுக் குழு ஒன்று பணி செய்கிறது.

இனிய செல்வ, எல்லாருக்கும் திடீர் என்று வருவாயை உயர்த்திவிடமுடியாது. ஆனால், விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தி ஒவ்வொருவருக்கும் செலவைக் குறைக்கலாம், குறைக்க முடியும். அப்படியே உற்பத்திச் செலவு கூடி விலை ஏற்றம் தவிர்க்கமுடியாத நிலையில் அரசு, அவசியமான நுகர்வுப் பொருள்களுக்குக் குறிப்பாக அரிசி, கோதுமை முதலியனவற்றுக்கு மான்யம் அளித்து நியாய விலையில் இல்லை, கட்டுபடியாகக்கூடிய விலையில் உணவுப் பொருளை வழங்கும் பொறுப்பை ஏற்கும்; ஏற்க வேண்டும். இதுதான் அரசின் நடைமுறை.