பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



473


செய்வதில் சோர்வு தலைகாட்டுகிறது! ஆகப் பண இழப்பு! அனுபவித்து வாழ மனமில்லை! கைப்பொருள் இழப்பு! பணிகளிலும் பாதிப்பு! இவையெல்லாம் லாட்டரிச் சீட்டால்-சூதால் விளையும் எதிர் விளைவுகள்.

இனிய செல்வ, குளத்தில் தூண்டில்! தூண்டிலின் நுனியில் புலால் துண்டு. இந்தப் புலால் துண்டின் நுனியை மீன் சுவைக்கிறது! என்ன நிகழும்! சுவைப்புலன் தூண்டப்பட்ட பின் மீண்டும் மீண்டும் துண்டினை அணுகித் தூண்டில் முள்ளில் சிக்கிக் கொள்ளும். முடிந்தது கதை! இனிய செல்வ, அதில் ஒன்று அடைந்தாலும் பிறிதொன்றை நாடுவதால் இழப்பேயாம். சூதாடுவோருக்கு நன்றாக வாழ்தல், இன்பமாக வாழ்தல் என்றும் இல்லை! கிடையாது! சூது வறுமையைத்தான் தரும். உழைப்பே செல்வத்திற்குரிய ஆதாரம்! அதிர்ஷ்டத்தில் ஒன்றும் நடப்பதில்லை! நடக்காது!

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு

(932)

இனிய செல்வ, சூது வறுமையையே தரும், சிறுமையே செய்யும். ஏன் இந்தச் சூது? இனிய செல்வ, குடிமக்களுக்கு நன்மையைத் தரவேண்டிய அரசு இங்ஙனம் சூதாட்டம் நடத்தலாமா? சூது பொருளைக் கெடுக்கிறது; பொய் சொல்லப் பழக்குகிறது. அன்பு, அருள் நலம் சார்ந்த வாழ்க்கையைக் கெடுக்கிறது. அல்லலில் உழலச் செய்கிறது. இத்தகு கொடுமை பல செய்யும் லாட்டரிச் சீட்டு விற்பனை தமிழ்நாட்டில் சற்றேறக்குறைய 750 கோடி. இந்த அவலம் தொடர்வது நல்லதல்ல; விரும்பத்தக்கதும் அல்ல. திருவள்ளுவருக்கும் உடன்பட்டதல்ல.

இன்ப அன்பு
அடிகளார்