பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

476

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கூட உயிர்பெற்று எழுந்து விட்டது. சாதிகளிலிருந்து தப்பி வளரவே ஒதுக்கீட்டுக் கொள்கை. ஆனால், நடைமுறையில் சாதிகள் வளர்கின்றன; இயக்கம் அடைகின்றன. இறுக்கம் அடைகின்றன.

இனிய செல்வ, "பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற வள்ளுவம் இந்த வையகத்தை வென்றெடுக்க வேண்டுமாயின் மனிதக் குலப்பிரிவினைகளுக்குக் காரணமான சாதிகள், மதங்கள், உலகியல், வாழ்க்கைக்குச் சாதனங்களாக அமைதல் கூடாது. சாதிகள் அடிப்படையில் சலுகைகள், இட ஒதுக்கீடு உள்ளவரை சாதிகள் தொலையா. புதிய சாதிகள் தலையெடுக்கும். போலிச் சான்றிதழ்கள் நடமாடும். இவையெல்லாவற்றையும் தவிர்க்க வேண்டும். குடும்ப அடிப்படையில் பின் தங்கிய நிலைமையை மட்டுமே அளவு கோலாகக் கொண்டு சலுகைகள் வழங்கப்பெறுதல் வேண்டும். இடஒதுக்கீடு அளித்தல் வேண்டும். எந்த ஒரு சலுகையும் காலக்கெடுவுடன் கூடியதாகவும் அமைய வேண்டும். இது தான் சமூக நீதி.

இன்ப அன்பு
அடிகளார்
85. மக்கள் இருக்கிறார்கள்: மனிதன் இருக்கிறானா?

இனிய செல்வ,

இந்தியாவில் மக்கள் தொகை அதிகம், எண்பத்தைந்து கோடி மக்கள். ஆனால் தகுந்த மனிதர்களைத்தான் காணோம். உலக வரலாற்றில் அரிஸ்டாட்டில் முதல் திருவள்ளுவர் வரை மனிதனைத் தேடியிருக்கிறார்கள். ஆனால் மனிதன் கிடைக்கவில்லை.

இனிய செல்வ, மனிதன் யார்? உடைமை பெற்றவன் மனிதனா? பட்டம், பதவிகள் பெற்றவன் மனிதனா? இல்லை, இல்லை! அப்படியானால் மனித உறுப்புகள்