பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை நலம்



37


தேவர் அவர் தேவர் என்று சண்டை போடும் உலகத்தை அறவே தவிர்த்திடுதல் வேண்டும்; ஆன்ம நேய ஒருமைப் பாட்டைக் காணல் வேண்டும்; ஒரு குலமாக வேண்டும். இதற்கு அன்பு செய்தலே வழி! ஆதலால், வையத்தீர் அன்பு செய்வீர்!

கதிரொளி பரவுகிறது. காய்கிற கதிரொளியாக மாறுகிறது. குளிர்காய்தலுக்காக வெயிலில் படுத்திருந்த புழு, காய்கிற கதிரொளியால் சுடப்பட்டு இறந்து போகிறது: அழிந்து போகிற்து. வெயிலின் வெப்பத்தை தாங்கிக் கொள்ளும் ஆற்றல் புழுக்களுக்கு இல்லை. ஏன் எலும்பு இல்லாததால்! மனிதன், எலும்பு உள்ளவன்! அதிலும் முதுகெலும்பு உள்ளவன். வலிமையான படைப்பு. ஆயினும் ஏன்? அன்பில்லாத மனிதன் அழிவான்! அறக்கடவுள் அன்பில்லாத மனிதனைச் சுடும். வாழ்வு பாழாகும்!

"என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்”

(77)

இதனால் பெறப்படுவது, மானுடத்திற்கு உண்மையான வலிமை அன்பினால் மட்டுமே என்பது. அன்பில்லையேல் மானுடம் வாழ்தல் அரிது. ஆதலால் அன்பு செய்வீர்! அன்பே இந்த உலகத்தினை இன்ப உலகமாக்க உள்ள ஒரே வழி!

10. அன்பாற்றல்

அன்பு - இஃது ஒர் உயிர்ப் பண்பு; மனிதகுல வரலாற்றை உயிர்ப்புள்ளதாக்கும். பண்பு, தீமையைத் துடைத் தெறியும் ஆற்றல் மிக்க பண்பு; படைப்பாற்றல் மிக்க பண்பு. இந்த அன்பு தற்சார்பில்லாதது; முற்றாக அயலாரை நோக்கியே செல்லும் பண்பு. இத்தகு அன்பினை உயர் பண்பாகப் பெற்ற மனிதன் வளர்வான்; வாழ்வான். இத்தகு