பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

478

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வர்களாகி விட்டனர். ஐயோ, பாவம் அப்பாவிகள்! இத்தகைய நல்லவர்கள் கூட்டம்? அப்பாவிகள் கூட்டம் சமுதாயத்தில் 90 விழுக்காடு தீயவர்கள் கூட்டம் 10 விழுக்காடு தான். செயலாண்மையும் துணிவும் இல்லாதவர்கள் கோடிக்கணக்கில் இருந்து என்ன பயன்? நல்லவன் திண்ணையிலிருந்து எழுந்திருப்பதற்கு யோசிக்கும் வேளையில் கயவன் ஊரையே கொளுத்திவிட்டுச் சாப்பறை கொட்டத் தொடங்கிவிடுவான். இதுதான் இன்றைய நடைமுறை. இத்தகு மாக்களுடன் பழகுவதை விடக் கொடிய மிருகங்களிடத்தில் கூடப் பழகி விடலாம்; வாழ்ந்து விடலாம். இனிய செல்வ, இங்கு அறிவியல், நடைமுறை இயலுடன் மாறுபடுகிறது. ஆம்! நீ சொல்வதுதான்! மனிதனைத் திருத்தமுடியும் என்று அறிவியல் நம்புகிறது. ஆனால், இலக்கிய மரபுகள் இயலாமையையே எடுத்துக் கூறுகின்றன. பொதுமறை கூறவந்த திருவள்ளுவரே

"நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்"

என்று கூறியதை ஓர்க. இனிய செல்வ, ‘பழமொழி’ என்ற இலக்கியம் கரியைப் பாலில் கழுவினால் கரி வெண்மையாகாது. பால்தான் கருப்பாகும் என்று கூறுகிறது. அதுமட்டுமா? சுவைமிக்க தேனில் எட்டிக்காயை ஊறப் போட்டாலும் எட்டிக்காய் இனிக்காது! இனிய செல்வ, அறுமுகச்செவ்வேள் சூரபன்மனை ஊர்தியாகக் கொண்ட தத்துவம்தான் என்ன? சூரபன்மனைப் பயன்படுத்தலாம். அவனாகப் பயன்பட மாட்டான்! அதுவும் எப்போதும் கண்காணிப்பில் தொடர் மேலாண்மையின்கீழ் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். நிர்வாக இயலில் Under Control என்று கூறுவர். இனிய செல்வ, இன்றைய இந்தியாவில் தமிழகத்தின் நிலை இதுதான். மக்கள் கூட்டம் இருக்கிறது. தகுதியான நபர்களைத் தேடவேண்டியிருக்கிறது. இது எதிர்கால இந்தியாவிற்கு நல்லதல்ல. சோறும் துணியும்