பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



481


பெரிய மூலதனம் உள்ளவர்களும் இலட்சாதிபதிகளும் நகரத்தார் சமூகத்தில் உண்டு. இது உண்மை. ஆனால், சமூகத்தில் ஒரு சில நூறு குடும்பங்கள் வசதி பெற்றிருந்தால் அந்தச் சமூகத்தையே முன்னேறிய சமூகம் என்று கூற முடியுமா? அல்லது கூறலாமா? அதுபோலவே, பிற்பட்டோர் என்ற சமூகப் பட்டியலில் தான் ஜமீன்தார்கள் அனைவரும் உள்ளனர். அதனால் அந்தச் சமூகம் முழுதும் முன்னேறியது அல்லது பிற்படுத்தப்பட்டது என்று கூற இயலாது.

ஆதலால், இடஒதுக்கீடு அவசியமில்லை என்பது நமது கருத்து அல்ல. இட ஒதுக்கீட்டிற்குக் கால நிர்ணயம் வேண்டும். இட ஒதுக்கீட்டு முறை சமூக ரீதியில் அமைவது கடை கோடி மனிதன் முன்னேறத் துணை செய்யாது. குடும்ப அடிப்படையில் அமைய வேண்டும். இட ஒதுக்கீட்டுக்கு, பிறந்த சாதியை-சமூகத்தை ஆதாரமாகக் கொள்ளாமல் பின்னடைவு நிலையைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பள்ளத்தில் கிடப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்காது போயினும் சமூகம் கெடும்! உண்மையை ஓர்ந்து உரியவாறு செய்யாது போனால் சமூகம் கெடும்!

"செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்"

இன்ப அன்பு
அடிகளார்
87. ஊழல் பிரச்சனைக்குத் தீர்வுகாண....

இனிய செல்வ,

நமது நாட்டு அரசியலில் - அதுவும் மைய அரசியலில் பங்குபத்திர ஊழல், சர்க்கரை இறக்குமதி ஊழல் ஆகிய செய்திகள் தீ பற்றி எரிவதைப்போல் எரிந்து கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றம் சென்ற சில நாள்களாகக் கூடியும் நடைபெறவில்லை! எதிர்க் கட்சியினர் பல நாள்கள் உள்ளே

தி.32.