பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

484

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கிடைக்காது, தனது பெருமை பாதிக்கும் என்று நினைத்தும் சிக்கலை வளர்ப்பர். மனிதர்களில் பலவிதம்! இதற்குள் முங்கிக் கரையேறுவதுதான் ஜனநாயகத்திற்குரிய தேர்வு! இத்தேர்வில் வெற்றி பெறுவோர் சிலரே!

அரசியல் ஆதாயம், கட்சி-பிரதி கட்சி மனோபாவம் இம்மியும் இருக்கக்கூடாது. இன்று இதுதான் இல்லை. ஆட்சி எந்திரமே அரசியல் கட்சியாக-அரசியல் கட்சியின் அதிகார பீடமாக மாறிவரும் அபாயம் வளர்ந்து வருகிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல. நாட்டு மக்களில் 80 விழுக்காட்டு மக்கள் அரசியல் கட்சிகளைக் சார்ந்திருக்கவில்லை. விரும்பிய கட்சிக்குத் தங்களுடைய வாக்கை அளிக்கிறார்கள். வாக்களித்தவர்களை மறந்துவிடக் கூடாது. கட்சிக்காரர்களையே சுற்றக்கூடாது. நாட்டுமக்களை, சுதந்திரம் இழந்து கட்சியாளர்களைச் சுற்றும்படி செய்யக்கூடாது. நாட்டு மக்களுக்குத் தாங்கள் விரும்புகிற அரசியலைப் பின்பற்றுகின்ற - வாக்களிக்கின்ற உரிமை உண்டு. அந்த உரிமை பாதுகாக்கப் பெறுதல் வேண்டும்.

பாராளுமன்ற எதிர்க் கட்சிகள் பாராளுமன்றத்தைப் புறக்கணிப்பதைக் கைவிட வேண்டும். ஆளுங்கட்சியும் பெரும்பான்மையை நம்பி ஆட்சி செய்யக்கூடாது. எதிர்க்கட்சி வாக்கு ஒன்று, ஆள்கின்ற அரசுக்கு விரோதமாகிறது என்றால் அதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு தமது கொள்கையை-கோட்பாட்டை-அணுகுமுறையை ஆய்வு செய்ய வேண்டும். ஒரு சிக்கலுக்கு ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒத்த நிலையில் ஒரு முடிவு காண இயலாமற் போயின் பாராளுமன்ற நடவடிக்கைகளை அடையாளமாக ஒரு மணிநேரம் வேண்டுமானால் புறக்கணிக்கலாம். இனிய செல்வ, வெளி நடப்புச் செய்யாமல் இதில் தீர்வு காணாமல் பிரச்சினை இறுக்கமாகி விட்டால் என்னசெய்வது? என்று கேட்கிறாய்; ஒரேவழி பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இராஜிநாமா செய்துவிட்டு மக்கள் மன்றத்திற்கு வந்து விளக்கமளிப்பதுதான் செய்யக்கூடியது.