பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

490

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சென்ற தலைமுறையினர், மனிதரைக் கொல்லும் கொள்ளை நோய்களை அறவே ஒழித்து வெற்றி கண்டனர். இன்றோ நாம், மீண்டும் அந்த நோய்களுக்கு இறையாகின்றோம்! ஏன்? அன்று அவர்கள் வாழ்ந்தனர். நாட்டுக்கு உழைத்தலைத் தவமெனக் கொண்டனர். சிரத்தையுடன் பணிகளை நிறைவேற்றினர். முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் பணிகளையும் பின் வந்த திட்டங்களின் பணிகளையும் ஒப்பு நோக்குக!

சுதந்திரம் பெற்றவுடன் நமது நாட்டில் அமைதியான வகையில் பணிகள் பல நடந்தன. அதனால், இன்று நமது நாடு பலமான பொருளாதார அஸ்திவாரத்தைப் பெற்று விளங்குகிறது. இன்று நாம் அஸ்திவாரங்களை மறந்து விட்டோம்! புறஞ்சுவர் பூசி மகிழ்கின்றோம்! இனிய செல்வ, நாடு மீண்டும் ஆவேசத்தைப் பெற வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம் என்று கருதிச் செய்தல் வேண்டும். இனிய செல்வ, வந்த பிளேக்கிற்கு விடைகொடுத்து அனுப்புவது எளிது! அது போதாது! நமக்கு சிரத்தை-அக்கறை தேவை! செய்யும் வேலைகளை இம்மாநிலம் பயனுறும் வகையில் செய்ய வேண்டும். இந்த நிலை உருவானால் நாடு வளரும்! நாமும் வளர்வோம்! இஃதன்றித் தினமும் சோறு தின்று, சின்னஞ் சிறுகதைகள் பேசிச் செத்துப்போகும். வேடிக்கை மனிதர்களின் எண்ணிக்கை பெருகி வளர்கிறது! இந்தப் போக்கு பிளேக்-கை விடக் கொடியது. இதற்கு தீர்வு கண்டாலே நம்நாடு சுதந்திரமாக வாழ இயலும். இனிய செல்வ, தோளில் சுமை அழுத்துகிறது! அந்நிய மூலதனச் சுமை! மூளையில் அழுத்தம் ஏற்பட இருக்கிறது! அந்நிய நாட்டுத் தொழில் நுட்பங்கள்! இனி படிக்கும் செய்தித்தாள்கள் கூட அந்நியத் தாள்களாக இருக்கும்! இனிய செல்வ, இந்தப் போக்கு-நம்மை-நமது மக்களை இந்த நாட்டுக்கு அந்நியமாக்கும் அபாயம் வந்து விடக்கூடாது! அசிரத்தையைத் தவிர்! எழுந்திரு! நாட்டுக்கு உழைத்திடும் தவம் செய்வோம்!