பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

496

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



தூய செங்குருதியைப் பெற்றுள்ள உடம்பில் நஞ்சு ஒன்றும் செய்யாது. நஞ்சினை, நஞ்சின் தன்மையை மாற்றும் ஆற்றல் தூய செங்குருதிக்கு உண்டு. அத்தகைய தூய செங்குருதியை எப்படி பெறுவது? விருப்பு-வெறுப்பற்ற நிலையிலேயே தூய செங்குருதி கிடைக்கும். விருப்பங்கள் இல்லாத வாழ்க்கை உண்டா? உண்டு! தேவை வேறு. விருப்பம் வேறு. விருப்பங்கள், வெறுப்புகளுக்கு வாயிலாக அமைந்து விடுதல் உண்டு. நமக்கு ஒன்றில் விருப்பம். நமது விருப்பத்திற்கு மாறாக விரும்புவர் அல்லது விருப்பத்திற்கு உடன்படாதவர் மீது வெறுப்பு ஏற்படும்.

இனிய செல்வ, வாழ்க்கை, செயல்களால் ஆய ஏடுகளை உடையது. செயல்களுக்குத் தாய் கடமையுணர்வு. கடமையில் விருப்பார்வம் இல்லாமல் போனால் கடமையைச் சீராகச் செய்துமுடிக்க இயலாதே! ஆம், உண்மைதான்! ஆனால், விருப்பம் என்பது கடமையைத் தூண்டும் அளவிற்கு இருத்தல் பிழையன்று. இறுகிப்போன வெறுப்புக்களை ஈன்றெடுக்கும் பண்பாக விருப்பம் உருக்கொள்ளக்கூடாது. இனிய செல்வ, நாம் இந்த மண்ணில் வாழ்கின்றோம்; சமூகத்தில் வாழ்கின்றோம்! நமக்கென்று வழி இருக்கிறது; சமயம் இருக்கிறது. பொறுப்புகள் இருக்கின்றன; கடமைகள் இருக்கின்றன. இந்தச் சமூகத்தில் நாம் எப்படி விருப்பு அற்றவர்களாக வாழமுடியும் என்பது உன்னுடைய கேள்வி! ஒருவருடைய விருப்பத்துடன் ஒத்துப் போகாதவர்களிடம் வெறுப்பு ஏற்படுவானேன்? பிரிவு ஏற்படுவானேன்? அந்நியமாக வேண்டிய அவசியம் என்ன? காலப்போக்கில் பகைவராக அனுமதிக்க வேண்டுமா? அவசியம் இல்லை.

இனிய செல்வ, ஒன்றுக்கொன்று இனம் என்று இயற்கையிலே உண்டு. பாலுக்கு இனம் உப்பல்ல; சர்க்கரை! அது போல, நீ காணும் ஒவ்வொருவரிடத்திலும் உனக்கு ஒத்துவரக்கூடிய ஒன்றிரண்டு பண்புகள் கூடவா இல்லாமல் இருக்கும்! இருக்கின்ற ஒத்த பண்பினை அறிந்து மேவிப்