பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

500

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நடந்தாலும் அது வாழ்தல் ஆகாது. இனிய செல்வ, வாழ்தலுக்குச் சமூகம் தேவை. சமூகம் தழுவிய உலகந்தழுவிய வாழ்க்கையைத்தான் வள்ளுவம் காட்டுகிறது. "உலகத்தோடு ஒட்ட ஒழுகல்" என்றே கூறுகிறது. ஒழுக்கத்தில் சிறந்தது உலகத்தோடு ஒட்டி ஒழுகுதல், உலகத்தோடு ஒட்டி ஒழுகுதல் எளிதான காரியமா? இல்லை, ஒருபோதும் இல்லை! கடினம் தான்! அந்தக் கடினமான முயற்சியைத்தான் மேற்கொள்ள வேண்டும். இடுக்கான வழியில் செல்வதே வாழ்வு என்று விவிலியம் கூறுகிறது.

மானுடம் ஒரு குலமாக வளர, அமைய என்ன செய்ய வேண்டும்? நல்லமுறையில் விளம்பரம் செய்து கூட்டத்தைக் கூட்டிவிடலாமே! ஆனால், கூடி வாழமாட்டார்களே! "இரண்டு மனிதர்களை ஒரு அறையில் போட்டுப் பூட்டி விட்டு சிலமணி நேரம் கழித்துத் திறந்து பார்த்தால் அந்த அறைக்குள் பிணங்கள் தான் கிடைக்கும்" என்றொரு துணுக்கு படித்ததாக நினைவு. மனிதன் சார்ந்து வாழ, கூடி வாழ எத்தகைய பண்புகள் தேவை? இன்று ஏராளமான மக்கள் கடவுளை வழிபடுகிறார்கள்! ஆனால், கடவுள் நெறியில் நிற்பதில்லை; ஒழுகுவதில்லை. வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாதவன் கடவுள்! அப்படியானால் இன்று கடவுள் நம்பிக்கை உடையவர்கள் வழிபடுகிறவர்களிடம் வேண்டுதல், வேண்டாமையாகிய இயல்புகள் - குணங்கள் இருக்கக்கூடாது அல்லவா? இன்று எங்குப் பார்த்தாலும் மிகமிக உயர்ந்த இடத்திலிருந்து கிராமம் வரை வேண்டுவோர் வேண்டாதோர் என்ற அணி மனப்பான்மை பெருகி வளர்ந்து வருகிறது. மிக உயர்ந்த ஜனநாயக மரபில் எதிர்க் கட்சிகள் இருக்கும்; இருக்கவேண்டும். ஆனால் இன்று நம்முடைய நாட்டில் எதிர்க் கட்சிகள் இல்லை. எதிரிக் கட்சிகள்தான் இருக்கின்றன. எங்குப் பார்த்தாலும் பிரிவினை உணர்ச்சிகள்!