பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

502

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொழுது போக்கு சாதனம் அல்ல!’ என்று அண்மையில் கங்கை அமரன் கூறியதை நினைவுகூர்வோமாக!

இனிய செல்வ, கருத்து வேற்றுமைகள் எழுவது இயற்கை. அவை பரிமாற்றம் செய்து கொள்ளப்பெற்று ஒத்த கருத்து உருவாதல் வேண்டும். இனிய செல்வ, அதுவும் இயலாது போனால் கருத்து வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு மன முறிவுக்கு இடம் கொடுக்காமல், உள்ளம் ஊனப்படாமல் பழகவேண்டும். பழகும் பாங்கில் ஒத்த கருத்து உருவாகலாம். அல்லது கருத்து வேற்றுமைகள் மறந்தே போகலாம். இனிய செல்வ, இத்தகு பண்புகளுடைய மனிதர்களைக் தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இனிய செல்வ, நம்முடைய ஆளுநர் - முதல்வர் மோதல்களைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. பெருந்தகைமை என்ற பண்பை இனிமேல் காணாமலே போய்விடுவோமோ என்ற அச்சம் மேலிடுகிறது. இனிய செல்வ, ஒழுக்கம் என்றால் என்ன? அதிலும் ஆன்மீக ஒழுக்கம் என்றால் என்ன? அன்றாட வாழ்க்கையில் சில நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பது மட்டும் ஒழுக்கமா என்ன? இவை ஒழுங்குகள்! ஒழுக்கம் என்பது உயிர் சார்ந்தது. உயிரியல் பண்புகளே ஒழுக்கம். அவற்றினுள்ளும் தலையாயது ‘வேண்டுதல் - வேண்டாமை’ அரசனிடமிருந்து மக்கள் விடுதலை பெற்றுக் கடவுள் நெறிக்குச் சென்றது வரலாற்றுத் தொடக்கமே. அரசன் வேண்டுதல் வேண்டாமையின் பாற்பட்டு நன்மையும் தீமையும் செய்ததால்தான் வேண்டுதல் வேண்டாமை இல்லாத கடவுளைத் தேடினர்; கண்டுபிடித்தனர். ஆனாலும் கறை படிந்த மனிதர்கள் அந்தக் கடவுளையும் இப்போது விட்ட பாடில்லை. கடவுளை, மதங்களுக்கும் சுரண்டல் பொருளாதாரத் தத்துவவாதிகளுக்கும் இரையாக்கி விட்டனர். இனிய செல்வ, கடவுளுக்கு ஈசுவரன் என்று ஒரு பேர் உண்டு. ஆனால், நமது மக்கள் கோடி பணம் தொகுத்து விட்டாலே ஈசுவரன் பட்டம் கொடுத்து, கோடீசுவரர் ஆக்கிவிடுவர்! இனிய