பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



505


செய்யும்போது சுதேசி விஞ்ஞான இயக்கத்தைத் தொடங்கினார். அந்த இயக்கத்தில் நமக்குப் பொறுப்பு ஏற்படுத்தித் தந்தார். சுதேசி விஞ்ஞான இயக்கம் கிராமங்கள்-சிற்றூர் வரையில் அறிவியல் கண்காட்சிகள் நடத்துவது மூலமும் தமிழில் அறிவியல் கருத்தரங்குகள் நடத்துவது மூலமும் அறிவியல் தமிழைப் பரப்பி வருகின்றது; வளர்த்து வருகின்றது. இனிய செல்வ, கடந்த மூன்றாண்டுகளாக அறிவியல் தமிழ்ப் பேரவை மாநாடு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதிலுமிருந்து விஞ்ஞானிகள் வந்து குவிகின்றனர். தமிழிலேயே அறிவியல் கட்டுரை எழுதிப் படிக்கவேண்டும்; வாசிக்கவேண்டும்; விவாதிக்க வேண்டும். அண்மையில் பாண்டிச்சேரிப் பல்கலைக் கழகத்தில் நடந்தது. 420 கட்டுரையாளர்கள். 300 பார்வையாளர்கள் வந்திருந்தனர். அறிவியல் தமிழில் புத்தகங்கள் நிறைய வந்துவிட்டன. நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் நிறைய வெளியிட்டுள்ளது. ஆதலால், அறிவியல் தமிழ் வளர்ந்துள்ளது. இருக்கும் குறை கல்லூரி மாணவர்கள் படிப்பதில்லை என்பதுதான்! இனிய செல்வ, தமிழ்வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பெற்றால் தான் அறிவியவில் தமிழ் வளரும். தமிழும் ஆட்சி மொழியாக இயலும்.

இனிய செல்வ, தமிழும் ஆங்கிலமும் கல்வி மொழி என்ற நடைமுறை ஒத்துவராது. தமிழே-தமிழ் மட்டுமே கல்வி மொழியாக இருத்தல் வேண்டும். ஆங்கிலம் ஒரு மொழிப் பாடமாகக் கற்பிக்கப் பெறுதல் வேண்டும். இந்திய நாட்டிற்கு மும்மொழித் திட்டமே ஏற்புடையது. மும்மொழித் திட்டம் இல்லாது போனால் தமிழ்நாட்டில் வாழும் பிறமொழியாளர் தமது தாய் மொழியைக் கற்கும் வாய்ப்பை இழப்பர். ஏன்? இந்தியா முழுதும் பரவி வாழும் தமிழர்கள் தமது தாய்மொழியாம் தமிழ் மொழியைக் கற்கும் வாய்ப்பை இழப்பர் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். ஆதலால் மூன்றாவது மொழியாக இந்திய மொழிகள் ஒன்றை