பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஒருவர் செய்த தீமையை மறவாமல் நினைவில் வைப்பதால் தீமை செய்தார்மீது காழ்ப்புணர்ச்சி கால் கொள்ளும்; அவருக்குத் தீமை செய்ய வேண்டும் என்ற முனைப்புத் தோன்றும். தீமை செய்தவருக்குத் தீமை செய்ய நேரிடும். தீமையை அடைந்தவர் நாம் செய்த தீமைக்குத்தானே தீமை என்று நினைக்கமாட்டார். மீண்டும் முறுகி எழும் சினத்துடன் தீமை செய்வார். அதனால் தீமையே சுழன்று கொண்டு வரும். முடிவு அழிவே. அதனால் "நன்றல்லது அன்றே மறப்பது நன்று" என்று திருக்குறள் அறிவுறுத்துகிறது. ஆம்! தண்டனைகளால் மனித உலகம் திருந்தாது. தீமை செய்யும் அறியா மானுடர்பால் அனுதாபமும், இரக்கமும் பரிவும் காட்டித் திருத்த முயல்வதே நன்மை நாடுவோர் பணி! வையகம் வளர வாழ வழி!

"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று"

(108)

இத்திருக்குறள், மானுட வரலாறு, சமூக இயல், உளஇயல் அடிப்படையில் தோன்றியது. அற்புதமான திருக்குறள். நன்றி மறப்பதனால் தீமை வளர்ந்து விடாது. அல்லது தீமை வளராது. நன்மை குறையும், அவ்வளவுதான். ஆனால் நன்றல்லாதவற்றை மறவாதிருப்பது பெருந்தீமை பயக்கும். அதனால் அதை "அன்றே" மறந்திடுக என்று வலியுறுத்துகிறது திருக்குறள்.

15. நன்றி பாராட்டுக!

"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று"

(108)

என்பது திருக்குறள். இந்த ‘நன்றி’ என்ற சொல் இன்று உலக வழக்கில் சாதாரண வழக்கிற்கே கையாளப் பெறுகிறது. அதாவது, ஒருவர் செய்த உதவியை மறத்தல் கூடாது.