பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை நலம்



49


(தராசை) முதலில் எடுத்து துலாக்கோலின் சமநிலையைக் காட்டுவர்; பின் எடை போடுவர். அதுபோல முதலில் அனைவரும் ஒத்த கருத்தினர் என்ற சமநிலை உணர்வு தேவை. இன்று நம்முடைய வாழ்க்கையில் துறைதோறும் நடுவு நிலை, முறை பிறழ்ந்து கிடக்கிறது. அரசியலில், சொல்லும் கருத்துக்கள் ஆராயப்படாமல், நபர்கள் ஆராயப் படுகின்றனர்.

"சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி”

(118)

என்பது திருக்குறள்.

"சமன் செய்து’, என்றார் திருவள்ளுவர். அதாவது இயல்பாகச் செய்யும் மனப்போக்கு இல்லை. வாழ்வியல் இல்லை என்பது தெளிவு. இந்தப் பூவுலகை மலைகள், கடல்கள் பிரித்திருக்கும் பிரிவுகளை விடக் கோடிக்கணக் கான பிரிவுகளை மனிதன் படைத்திருக்கின்றான். மனிதன் படைத்த பேதா பேதங்கள்-பிரிவுகள் ஆகியன பெற்றெடுத்த நச்சுப் பேய்கள்தானே ‘சுவர்’ ‘காவல்’ ‘வேலி’ ஆகியன. இவற்றிலிருந்து மனிதகுலம் என்று மீளும்? சீர்தூக்கும் கோல் என்றார்.

ஆம்! ஆய்வில் கூடச் சீர்மை பார்த்தலே நோக்கம். தீமை தூக்குவது இல்லை. தீமை தெரியாது! கண்ணிற்குப் படாது! ஆதலால், ‘கோடாமை' என்றார். ஆம்! மனிதர்கள் அவசரமாகக் கட்சி கட்டிக்கொண்டு, நியாயங்களைப் பார்க்காமல் ஒரு பக்கம் சாய்ந்து விடுகிறார்கள். இது மரபன்று. எந்தக் காரணத்தை முன்னிட்டும் நியாயத்தின் பால் நிற்காமல் சாய்ந்துவிடக் கூடாது. இத்தகு வாழ்க்கையே மக்களாட்சி முறையை வளர்க்கும்; அறநெறியை வளர்க்கும்.