பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை நலம்



51


நோக்கி ஆய்வு செய்யலாம். இந்த முழுநிலை ஆய்வு நடந்த பிறகு எது நன்று - அல்லது சரியானது என்ற துணிவுக்கு வரலாம். வரவேண்டும்.

எதுபோல எனில், கடைகளில் பண்டங்கள் எடை போடப் பயன்படுத்தும் தராசைத் தூக்கிச் சரிபார்த்தல் போல, தராசு நிலையில், அதாவது எடைக் கற்களும், பண்டங்களும் இல்லாமல் வெறும் நிலையில் தராசைத் தூக்கிச் சரிபார்த்து, தராசு நிலையில் பழுதில்லாமல் இருப்பதையும், சீராக எடை அளவு காட்டுகிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள முதலில் வெறுந்தராசைத் தூக்கிச் சரிபார்த்தல் முறை. அதுபோலவே தான், தக்க கருத்து அடிப்படையில்தான் முடிவெடுக்கப்படும் என்பதை உறுதிப் படுத்திக்கொள்ள உதவி செய்வது மற்றவர்களை மதித்தலாகும். அவர்தம் சிந்தனை மதிக்கப்பெறும்; நம்பிக்கையைத் தரும். எல்லோரையும் மதிக்கும் அடிப்படையிலே இது நிகழும்.

"சமன்செய்து சீர்துரக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி."

(118)
18. நடுவு நிலைமை

நடுவு நிலைமை ஓர் உயர்ந்த குணம்; பண்பு. நடுவு நிலைமை என்பது சார்புகள் காரணமாக முடிவு எடுக்காத கொள்கையாகும். எவரையும் எந்தச் சூழ்நிலையைப் பற்றியும் கவலைப்படாமல், யார் யார் சொன்னாலும் விருப்பும் வெறுப்பும் இன்றிக் கேட்டு, ஆய்வு செய்து விவாதித்து முடிவு எடுத்தலாகும்.

நடுநிலைப் பண்பு, நீதியைச் சார்ந்தது. நீதி உயிர்; நடுவு நிலைமை உடல், நடுவுநிலைக் குணம் அனைத்துக் குணங்களுக்கும் தாய் போன்ற முதல்நிலைக் குணம்.