பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை நலம்



55



மனிதன் அடைந்து ஒழுக வேண்டிய நற்பண்புகள் பலப்பல. அவற்றுள் தலையாயது தன்னல மறுப்பு. நீதியின் பால் வேட்கை, ஈகைக்குணம், அன்புடைமை இவையெல்லாம் சிறந்தனவாயினும் தன்னடக்கமில்லாது போனால், இந்தப் பண்புகள் சிறக்கா. ஆதலால் ஒழுக்கங்களுள் சிறந்தது - தலையாயது தன்னடக்கம், கிரேக்கச் சிந்தனையாளன் சாக்ரட்டீஸ் மனிதன் மேற்கொள்ள வேண்டிய முதல்நிலைப் பண்புகளாகத் தன்னடக்கத்தையும் புலனடக்கத்தையும் கூறினான்.

தன்னடக்கம் என்ற சிறந்த பண்பினைப்பெற வேண்டுமாயின் மற்றவர்களிடம் குறை காணும் தீமை அறவே கூடாது. ஒரோ வழி குறை கண்டாலும் அதை இரகசியமாகக் கொண்டு பிறரிடம் கூறக்கூடாது. வீணான விவாதங்கள் அறவே கூடாது. கட்சி-பிரதி கட்சிச் சுழியில் சிக்கித் தவிக்காமல் என்றும் எப்பொழுதும் பொதுநிலை வசிக்க வேண்டும். தன்னைப் பற்றிய உயர்வு நினைவுகளை விட்டொழித்து விட்டால் அடக்கப்பண்பு வந்து விடும்.

பொதுவாகத் திருக்குறள் அடக்கமுடைமையையும் அதன் பயனையும் முதல் நான்கு குறள்களில் வகுத்துக் கூறுகின்றது. அடுத்து மற்றவர்களிடத்தில் பணிவாக நடந்து கொள்ள வேண்டிய பண்பை எடுத்துக் கூறுகிறது. செல்வமுடைமை அகந்தையை வளர்க்கும். ஆதலால், செல்வம் உடையார் பணிவுடையாராகவும் இருப்பின் இரண்டு மடங்கு செல்வம் பெற்றது போன்றது என்பது திருக்குறள் கருத்து.

அடுத்து, ஐம்பொறிகள், ஐம்புலன்களின் அடக்கத்தை, எடுத்துக் கூறுகிறது; அடக்கமுடைமை என்ற பண்பின் தோற்றத்திற்குரிய ஒழுகலாற்றை எடுத்துக் காட்டுகிறது. புலன்கள், ஆசைகள் தோன்றும் களம். ஆசைகள் தோன்றி வளர்ந்தால் அடக்கமுடைமையைப் பெறுதல் இயலாது.