பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அடைய நினைப்பது ஆசையல்ல. அளவற்று வெறி பிடித்த நிலையில் அடைய நினைப்பதே வெறுக்கத் தக்க ஆசை.

புலன்களில் தூய்மை காத்தால், தாமே பொறிகளில் தூய்மை காணப்பெறும், பொறிகள் மீது தனி ஆணை செலுத்தி நெறிப்படுத்திக் கொள்ளவேண்டும். நமது வாழ்க்கை என்ற தேர் பத்துக் குதிரைகள் பூட்டிய தேர் ஆகும். இந்தப் பத்துக் குதிரைகள் புலன்களும் பொறிகளுமாகும். இவைகளின் பிடி நமது கையில் இருப்பதே ஒழுக்கம் நிறைந்த வாழ்வு. ஒழுக்கமுடையார் என்றும் நலமுடன் வாழ்வர்; வெற்றிகளுடன் வாழ்வர்; பலருக்கும் பயன்பட வாழ்வர். வாழ்க்கையின் பெரும்பகுதி ஒழுக்கத்தால் சிறப்பது. வாழ்க்கைப் பயணத்தின் நெடிய வரலாறு ஒழுக்கத்தாலேயே எழுதப் பெறுகிறது.

அடுத்து ஒழுக்கத்தின் இரண்டாவது நிலை, சமுதாய ஒழுக்கம் எனப்படும். அதாவது பலருடன் ஒத்திசைந்து வாழ்தல். விதண்டா வாதங்களும், பிணககும், பகையும் சமூகத்தை அரித்து அழிக்கும் கரையான்களாகும். சமுதாயமே தனிமனிதனை உருவாக்கும் பட்டறை, ஆதலால், சமுதாய ஒழுகலாறுகள் கண்டிப்பாகப் பின்பற்றத் தக்கன. சமுதாயத்தின் மதிப்பைக் கெளரவித்தலில் தனிமனித ஒழுகலாறு சிறப்படைய வழி உண்டு. மதிப்பீட்டுப் பொறுப்புள்ள சமுதாய அமைப்பு, சமுதாய ஒழுக்கம் சீர்கெடின் தனிமனித ஒழுகலாறும் சிறக்க இயலாது. ஆக ஒழுக்கமுடையராக வாழ்தலே வாழ்க்கை.

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்."

(131)

என்பது ஒரு சிறந்த குறள். ஆம்! ஒவ்வொருவருக்கும் அவர்தம் உயிர்பெரியது; எல்லாவற்றிலும் பெரியது. சாக யாரும் விரும்புவதில்லை. அதனால்தான் ஓரறிவுயிர் முதல் ஆறறிவு உயிராகிய மானிடன் வரையில் எல்லா உயிர்களும்