பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை நலம்



63


நல்லொழுக்கம். எல்லா உயிர்களிடத்திலும் எத்துணையும் பேதமுறாது, மகவென ஒக்கப் பார்த்து ஒழுகுதலே ஒழுக்கம்.

குடிமைப் பண்பிலாதார், ஒருமைப்பாட்டுணர்வு இலாதார், உலகந்தழீஇய செந்தண்மை இலாதார் ஒரு நாட்டின் குடிமக்களாதல் இயலாது. ஏன்? அவர்கள் மனிதக் கணக்கில்கூட வரமாட்டார்கள். அவர்களை இழிந்த பிறப்பு என்று ஏசுகிறார் திருவள்ளுவர்.

ஒன்றே குலம் - எல்லாரும் ஒருகுலம் - எல்லாரும் ஓர் இனம். ஒப்புரவுடன் ஒத்திசைந்து வாழ்தல். உலகம் உண்ண உண்ணல், உலகம் உடுத்த உடுத்தல், வாழ்வித்து வாழ்தல் - இதுவே ஒழுக்கம்.

இந்த ஒழுக்கம் வளர, உழைத்து உண்ணுதல், உண்பித்து உண்ணுதல் என்ற நடைமுறை துணை செய்யும்.

இந்த நல்லொழுக்கத்திற்குப் பகையான ‘பிறர் பங்கைத் திருடுதல்’, பிறர் வருந்த வாழ்தல் ஆகியன தவிர்க்கப் பெறுதல் வேண்டும்.

ஒழுக்கமே மானுடத்தின் விழுப்பம்; சிறப்பு. ஒழுக்கமுடைய உலகம் வளரும்! வாழும்!

24. ஒட்ட ஒழுகல்

ஒழுக்கம் உடையராதல் அரிது. ஆயினும் ஒழுக்கம் உடையராக வாழ்தலே வாழ்தல். "ஒழுக்கம்" என்ற சொல் பலராலும் கேட்கப் பெறும் சொல் ஆயினும் ஒழுக்கம் என்ற சொல்லுக்கு மக்கள் மன்றத்தில் கற்பிக்கப் பெற்றுள்ள பொருள். மிகச் சுருங்கியது. அதாவது ஆண் பெண் உறவுகளில் குற்றம் ஏற்படாமல் வாழ்வதே ஒழுக்கமுடைமையாகும் என்பது வலிமை சான்ற ஒரு கருத்து. இதில் தவறில்லை; உண்மை இருக்கிறது. ஆயினும் பெண் வழி நேரிடும் பிழைகளைத் தவிர்த்தல் மட்டுமே ஒழுக்கமுடைமையாகாது. இது ஒழுக்கமுடைமையின் ஒரு கூறு.