வாழ்க்கை நலம்
85
பிரிப்பர்; சமூகத்தில் பிரிவினைகளை உண்டாக்குவர். இத்தகையோர் நம்மை நாடி வந்து வாய் திறந்தால் நமது காதைப் பொத்திக் கொள்வது நல்லது. புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்பவர்கள் வல்லவர்கள், நமக்கு நல்லன செய்வது போலக் கூறுவார்கள்; சாத்திர ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுவர். காற்று இடைப்புகாது பழகிய நட்பு உடையாரைக் கூடப் பிரித்து விடுவர். எனவே விழிப்புடன் இருத்தல் வேண்டும்.
உலகில் உயர்ந்தது நட்பே! உலகில் உயர்ந்த அறம் ஒன்றி நின்று பழகுதலே! ஒன்றுதலுக்கு ஈடான அறம் இல்லை! இந்த அறம் நிகழ்ந்தாலே சமுதாயத்தில் திருத்தங்களும் கூடத் தோன்றும்; தீமைகள் சாயும்; நன்மைகள் பெருகும்.
ஆதலால், ஒருவரைப்பற்றி நன்றாக மட்டும் பேசக் கற்றுக் கொள்க! ஒருவரைப் பற்றிப் பிறிதொருவரிடம் நல்லன எடுத்துக்கூறி நட்பினைத் தோற்றுவித்து வளர்க்க முயல்வீர்! இதுவே வாழும் வழி!
"பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்வி
நட்பாடல் தேற்றா தவர்”
(187)
இந்த உலகப் படைப்புகளெல்லாம் பயனை மையமாகக் கொண்டனவேயாம். பயன்படுத்தப்படாதன கழிகின்றன. தவறாகப் பயன்படுத்தப்படுவன தீமையை விளைவிக்கின்றன. இந்த உலகில் ஆற்றல் வாய்ந்தவைகளில் "சொல்” தலையாயது. சொல்லப்படுவது சொல். அறிந்து ஆராய்ந்து சொல்லப்பெறும் சொற்கள் பயனைத் தரும்.