பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒருசேரத் தொகுத்துப் பார்க்க வேண்டும் என்ற வேணவா என்னுள்ளத்தில் முகிழ்த்தது. அது இன்று கைகூடுகிறது.

புகழ்மிக்க அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அடிகளார் அவர்களுக்கு டாக்டர் பட்டம் (D.Litt) வழங்கிய போது அவர்களிடம் வாழ்த்துப்பெற்று, அடிகளார் நூல் வரிசைத் திட்டத்தை விரிவாக விளக்கினேன். "நல்ல திட்டமாக இருக்கிறது. செய்யலாம்" என்று சொல்லி இசைவளித்தார்கள். அடிகளார் எழுதிய 50-க்கு மேற்பட்ட நூல்களையும் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.

தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்களை நேரில் சந்தித்து ஆசிபெற்று நூல்வரிசைத் திட்ட அறிக்கையைப் பணித்தேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்தி இசைவு தந்தார்கள். பதிப்புக் குழுவை உருவாக்கினார்கள். கட்டுரைகளை வகைப்படுத்தும் பணி தொடங்கிற்று.

ஒவ்வொரு தொகுதியும் 400 பக்கங்கள் கொண்ட 10 தொகுதிகளாக வெளியிடும் திட்டத்தில் ஏற்கனவே முதல் மூன்று தொகுதிகள் வெளிவந்துள்ளன. இன்று நான்காவது தொகுதி வெளிவருகிறது.

  1. திருக்குறள்
  2. இலக்கியம்
  3. சமயம்
  4. சமுதாயம்
  5. பொது

என 5 நிலைகளில் இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மறைமலை அடிகளுக்குப்பின் 1960-90களில் சைவ உலகில் அடிகளார் பெரும்புரட்சி செய்தவர். சைவ சமய மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தவர். சமயக் காழ்ப்பின்றி சைவசமயத்தின் கோட்பாடுகளை, தத்துவக் கூறுகளை பொதுமக்களும் உள்ளம் கொள்ளும்படி விளக்கியவர் தமிழ்மாமுனிவர். சைவ சமயத்தை நடைமுறைச் சமயமாக்கவும், சீர்திருத்தக் கருத்துக்கள் செயற்படவும் அல்லும் பகலும் அயராது உழைத்து, புதியதொரு விடியலைக் கண்டார்கள். பெரியாரும் போற்றும் வண்ணம் பெருமிதமாக வாழ்ந்தார்கள். தமிழ்நாட்டில் பெரிய சைவத்திரு மடங்கள் 18 இருந்த போதிலும் குன்றக்குடி ஆதீனமே மக்களால் பெரிதும் அறியப்பட்டிருந்தது. தமிழ் மறுமலர்ச்சியின் ஒரு கூறாகிய சமய எழுச்சி, திருமுறை