பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இத்தகைய உழைப்பு வாழ்க்கையில் இன்பம் காணும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கை, இல்லறமா? துறவறமா? என்பதெல்லாம் உரையாடற்குரியதல்ல. எப்படி வாழ்கிறோம் என்ற முறையில்தான் அது சிற்றின்பமாகவோ, பேரின்பமாகவோ இடம் பெறுகிறது.

19. புறங்கூறாமை

புறங்கூறுதல் என்பது ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிய குற்றங்குறைகளைச் சொல்லுதல். பொதுவாகப் புறங்கூறுதலுக்கு இதுவே இலக்கணமானாலும் முழுமையான இலக்கணமன்று. ஒருவரைக் கண்டவிடத்து முகமன் பேசிப் பாராட்டிவிட்டு அவர் இல்லாதவிடத்து அவரைப்பற்றியே குற்றங்குறைகளைச் சொல்லுதல் புறங்கூறலாகும். அதுமட்டுமன்று, ஒருவர்முன்னே அவர் தம் குற்றங்குறைகளை எடுத்துக்கூறி அவரைக் குற்றங்குறைகளிலிருந்து விலக்கி நலங்காண வாய்ப்பிருக்குமானால் அவ்வாய்ப்பினைப் பயன்படுத்தாது, புறத்தே-அதாவது அவர் இல்லாத இடத்தே-அவர்தம் குற்றங்குறைகளைக் கூறுதல் புறங்கூறுதலாகும். இத்தகைய புறங்கூறலில் பயனில்லை. மாறாகப் பழியும் பகையும் வரும்.

புறங்கூறல் என்கிற குற்றம் தோன்றும் வாயில்கள்:

1. ஒருவரின் செல்வம், புகழ், தகுதி முதலியவற்றின் பாற்பட்ட சிறப்புகளைத் தாங்கமாட்டாது அழுக்காறு கொள்வதால் தோன்றும்.

2. ஒருவரின் கருத்தை நேரிடையாகப் பேசி மறுக்கும் திறன் இன்றி, அதேபொழுது தன் கருத்தை மிகைப்படுத்தும் பொய்மை வந்துழி புறங்கூறல் தோன்றும்.