பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முன்னிட்டும் குற்றங்களைக் கூறுதல் புறங்கூறுதல் பாற்படும்.

புறங்கூறல் என்கிற குற்றம் வளராமல் தவிர்ப்பதற்குரிய வழிகள்:

1. எல்லாரையும் எப்போதும் மதித்துப் பாராட்டி மகிழும் நல்லியல்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

2. யாருடனாவது மாறுபாடுகள் தோன்றினாலும் அம் மாறுபாட்டை மாற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

மாறுபாடுகளைக் காழ்ப்பாகவும் பகையாகவும் வளர்த்துக் கொள்ளக்கூடாது.

3. உலகில் எல்லாரிடத்திலும் ஏதாவது நல்ல தகுதிகள் இருக்கத்தான் செய்யும். அத்தகைய நல்ல தகுதிகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். காலம் பயனுடையது ஆதலால், எப்போதும் நற்சிந்தனை, நல்ல பேச்சு, நல்ல செயல் ஆகியவைகளில் இடை விடாது ஈடுபடல் வேண்டும்.

4. எந்த வொன்றையும் அயராத உழைப்பின் மூலமே அடைய வேண்டும்.

20. பயனில சொல்லாமை

"எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே” என்பார் தொல்காப்பியர். பொருள் என்பது வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய எதையும் குறிக்கும். அதாவது நுகர் பொருள்கள், செல்வம், வாழ்க்கைக்குரிய நற்கருத்து, நற்பண்பாடு, மகிழ்ச்சி தரக்கூடிய கலை முதலியவற்றைக் குறிக்கும். எந்த ஒரு பொருளையும் அல்லது பயனையும் தராத சொற்களைச் சொல்லுதல் கூடாது. பயனில்லாத