பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



117


சொற்களைப் பேசாமை என்பது ஓர் ஒழுக்கம். இந்த ஒழுக்கத்தின் மூலம் மனித ஆற்றல் வீணாக்கப்படாமல் பாதுகாக்கப்பெறும்; தேவையில்லாத வதந்திகள் தவிர்க்கப்பெறும். பகை முதலியனவும் தவிர்க்கப்படும். ஆதலால், காசுகளை எண்ணிச் செலவிடுதலினும் கவனமாகச் சொற்களை எண்ணிச் சொல்லப்பழகுதல் வேண்டும். பயனற்ற சொற்களை ‘வறுமொழி’ என்று இளங்கோவடிகள் கூறுவார்.

பயனில்லாத சொற்களைப்பேசும் நிலை, காலத்திற்கு அளவான உரிய கடமைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளாதவர்க்கு ஏற்படும் சோம்பல் நிலையில்தான் பயனில சொல்லும் பழக்கம் தோன்றும். ஆதலால், சோம்பலைத் தவிர்த்து எப்பொழுதும் ஏதாவதொரு பணியில் ஈடுபட்டுச் செய்து கொண்டேயிருக்கவேண்டும். அடுத்துத் தேவையில்லாமல் வம்புவளர் அரங்கஞ் செய்யும் பழக்கத்தைத் தவிர்க்கவேண்டும்.

பயனற்ற சொற்கள் இரண்டு வகையின. முதலாவது முற்றாகப் பயனற்ற சொற்கள். இரண்டாவது சிறிதளவு பயன் தந்து பெரிதளவு பயனற்றவை. ஒரு கருத்தை நேரிடையாக விளக்கும் வகையில் குறைந்த சொற்களையே பேசவேண்டும். சுற்றி வளைத்து இசை ஆளத்தி (இராக ஆலாபனம்) போலச் செய்து கொண்டிருக்கக்கூடாது.

நம்முடைய வாழ்நாள் நொடிக்கணக்கில் கணக்கிடப்படுகிறது. இயற்கை வெறுப்பு விருப்பின்றித் துல்லியமாகக் கணக்கிட்டு எந்தக் காரணத்தை முன்னிட்டும் தவணை கொடுக்காமல் வாழ்க்கையை முடித்துவிடுகிறது. ஆதலால் நம்முடைய வாழ்நாளில் ஒவ்வொரு நொடியையும் கணக்கிட்டுக் கடமைகளைச் செய்து வாழ்க்கையின் முடிவில் வாழ்க்கை பயனுடையதாக அமைய ஓயாது முயலுதல் வேண்டும். வாழ்க்கையின் உயர்ந்த நோக்கத்தைப் புரிந்து