பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



4. யார் மாட்டும் நட்பு, பகைமை, நொதுமல் என்ற வேறுபாடின்றி அன்பு காட்டினால் தீய வினைகள் செய்தலினின்றும் எளிதில் மீளலாம்.

அழுக்காறு, பகைமை போன்ற காரணங்களாலேயே தீய வினை செய்யும் சூழ்நிலைகள் வளர்கின்றன. அழுக்காறு, பகைமைகளை மறந்து விட்டால் தீயவினைகள் செய்யும் மனம் தோன்றாது.

யாரும், எவர்க்கும், எதற்கும் நன்மை செய்வதே வாழ்க்கையின் நோக்கம் என்ற உணர்வுகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் தீய வினைகள் செய்யாமை ஏற்படும்.

தீய வினைகள் செய்யாமையை முற்றாகத் தவிர்க்கும் பொழுது ‘ஏமாளி’, ‘கோழை’ என்ற ஏளனப் பேச்சுகள் கிடைக்கும். கவலற்க; இழிவை விரும்பாமை போலவே புகழையும் விரும்பாதிருத்தல் உயர் பண்பாகும்.

அழுக்காற்றையும், பகையையும் தவிர்த்திடுக. தீயவினைகளைச் செய்ய அஞ்சுதல் மூலம் யாண்டும் பயமின்றி வாழலாம்; துன்பமே வாராது; இன்புறும் நலன்கள் பலவும் பெற்று வாழலாம்; உறவுகள் வளரும்.

திருக்குறள் அறநூல்; தீயவினை செய்யாமையாகிய அறத்தினை அறநூல் விளக்கியது.

‘தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செருக்கு.’

201

செருக்காகிய தீமையின் பாற்பட்டவர்கள் தீய வினைகள் செய்ய அஞ்சமாட்டார்கள். நல்லவர்கள் தீயவினைகள் செய்ய அஞ்சுவார்கள்.

செருக்கு என்பது எல்லாரையும்விடத் "தாம் உயர்வானவர்,” “தம்மால் எதையும் செய்ய இயலும்" என்ற மன எழுச்சியாகும். செருக்கின்மை தீவினை அஞ்சுதலுக்குந் துணை.