பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



கேடு செய்தாருக்கும் தீமை செய்யக் கூடாது என்றால் அறத்திற்கு மட்டும் இது விதி விலக்கா?

அறக்கடவுள் என்பது, முறை (நியதி). அவரவர் செய்த செயல்களின் பயன்களை அவரவர் துய்க்கும்படி செய்வதே அறக்கடவுளின் கடப்பாடு, ஆதலால் அறக்கடவுளுக்கு வேறுபாடுகள் இல்லை. காய்தல், உவத்தல் இல்லை; அறக்கடவுளுக்கு மகிழ்ச்சியும் துன்பமும் இல்லை. சுவையற்ற துலைக்கோல், பொருள்களை நிறுத்துத் தருவது போன்றது அறக்கடவுளின் செயல்.

‘இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.’

205

ஒருவன், தான் வறியவன் என்றும் செல்வம் பெறலாம் என்றும் எண்ணித் தீய வினைகளைச் செய்யற்க. அங்ஙனமின்றித் தீயவினைகளைச் செய்யின் மீண்டும் வறியவன் ஆகவே ஆவான்.

வறுமையைத் தீயவினைகளால் நீக்க முற்படுதல் கொள்ளிக் கட்டையைக் கொண்டு சொறிந்து கொண்டது போலத்தான்! தீய வினைகளால் மற்றவர்களுடையதைக் கவர்ந்து கொண்டாலும் வறுமை நீக்கம் நிலைத்து நிற்காது. கவர்ந்த பொருள் செல்லுழி, ஈடு செய்யும் ஆற்றலின்மையின் காரணமாக மீண்டும் வறியராதலே இயற்கை.

‘தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பாவ
தன்னை அடல்வேண்டா தான்.’

206

துன்பங்கள் தன்னை வருத்த வேண்டா என்று எண்ணுகிறவன், மற்றவருக்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்யாது தவிர்த்திடுக.

தன்னலம் பற்றியாயினும் தீய வினைகளைச் செய்யாதிருக்கவும் என்று கூறியவாறு.