பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஒருவன், அறநெறியினின்றும் விலகி மற்றவர்க்குத் தீவினைகளைச் செய்யாமல் இருப்பானாயின் அவன் கேடில்லாதவன் ஆவான்.

22. ஒப்புரவறிதல்

தம்மைச் சார்ந்த பலரும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் எண்ணத்தாலும் செயல்களாலும் உதவிகள் செய்யும் பாங்காலும் பயன் விளைத்து வாழ்தல் ஒப்புரவு ஆகும்.

குமுகாயத்தின் ஓருறுப்பு தனி மனிதன். குமுகாயம் இவனை வளர்த்து வாழ்விக்கிறது. அதற்கு ஈடாகக் குழுகாயமும் பயனடைகிறது. குமுகாயத்தில் ஓர் உறுப்பு என்று உணர்ந்து வாழும் பொழுது, ஒப்புரவு என்ற ஒழுக்கம் தவிர்க்க இயலாதது. குமுகாயத்திற்கு ஒத்தது அறிந்து செய்தலும் குமுகாயத்திற்கு இசைந்தவாறு வாழ்தலும் ஆகும்.

1. வளர்ந்து வாழ்வதற்குத் துணையாக அமைந்துள்ள குமுகாயத்திற்குப் பயன் பட வாழவேண்டும் என்ற உணர்வில் ஒப்புரவு தோன்றும்.

2. சிந்தையாலும் செயலாலும் குமுகாயத்திற்குப் பயன்பட வாழ்தல் வேண்டும் என்ற உணர்வே ஒப்புரவு நெறியின் தோற்றம்.

3. தற்சார்பான வாழ்க்கையை விடக் குமுகாயச் சார்பான வாழ்க்கையே அறச்சார்புடையது என்று எண்ணி வாழத் தலைப்படும் பொழுது, ஒப்புரவு நெறி தோன்றுகிறது.

4. வரலாற்று உணர்வோடும் குமுகாயச் சிந்தனையோடும் வாழத் தலைப்படும் பொழுது, ஒப்புரவு ஒழுக்கம் கால் கொள்ளும்.