பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



3. பலசமயங்களில் உதவி பெற்றவர் திரும்பச் செய்ய நினைத்தாலும் இயலாத நிலை நேர்வதுண்டு. அப்போது அவர், 'உதவி செய்தவர் எதிர்பார்த்தபடி செய்ய முடியவில்லையே' என்று நினைத்து வருந்துவர்.

‘தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.’

212

ஒப்புரவாளன் முயன்று ஈட்டிய செல்வம் முழுதும், தக்கவர்களுக்கு உதவி செய்தலுக்கே யாம்.

“தாளாற்றித் தந்த பொருள்” அயரா முயற்சியால் ஈட்டிய பொருள் என்பது கருத்து. தாளாற்றித் தந்த பொருள் என்றதால் வழி வழி வரும் செல்வமும் ஆகூழால் வரும் செல்வமும், பிறர் பங்கைத் திருடுவதால் வரும் செல்வமும் செல்வமாகா என்ற உண்மை பெறப்படுகிறது. உழைப்பின் மூலம் வரும் செல்வமே செல்வம் என்பது வள்ளுவம் காட்டும் உண்மை.

"தக்கார்க்கு வேளாண்மை செய்தல்” என்றதால் தகுதி உடையவர்க்கே உதவி செய்தல் வேண்டும் என்பது கருத்து. இங்குத் தகுதியுடையவர் என்றது, பெற்ற உதவியைக் கொண்டு மேலும் வளர்வதற்குரிய இயல்பினைப் பெற்றவர் என்று பொருள் தரும். ஒழுக்கக் கேடிலாதவர் என்றலும் அமையும்.

1. ஓயாது உழைத்துப் பொருள் ஈட்டுக.

2. உதவி வேண்டியவர்களுக்கும், உதவியின் மூலம் வளர்ந்து வாழக்கூடியவர்களுக்கும் உதவி செய்க.

‘புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.’

213

ஒப்புரவு போன்ற நல்ல செயல்களைத் தேவர் உலகத்திலும் பெறுதல் அரிது. இந்த மண்ணுலகிலும் அரிதாகவே காண இயலும்.