பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



131



தேவருலகத்தில் காமதேனு, கற்பகத்தரு ஆகியன இருப்பதால் ஈவாரும் ஏற்பாரும் இல்லை என்பது புராணக் கருத்து. மேலும், தேவர்கள் தற்சார்பினால் சண்டை போட்டுக் கொள்ளும் இயல்பினர். ஆதலால், அமரருலகில் ஒப்புரவு ஒழுக்கம் இல்லை போலும்.

‘ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.’

214

குமுகாயத்திற்கு ஒத்ததறிந்து செய்பவன் வாழ்கின்றவனாகின்றான். இங்ஙனம் குமுகாயத்திற்கு ஒத்தது அறிந்து செய்யாதவன் வாழ்கின்றானில்லை; செத்தவனாகின்றான்.

1. குமுகாய நலமறிந்து செய்தல் ஒத்ததறிந்து செய்தலாகும்.

2. உயிர்க்குரிய இயல்பும் பயனும் இன்மையால் செத்தார் என்றார்.

தனக்கு நலம் பயப்பனவெல்லாம் மற்றவர்க்கும் ஆம் என்று அறிந்து செய்தல் ஒத்ததறிதல் என்று கூறலும் அமையும்.

‘ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.’

215

உலகு தழுவிய வாழ்க்கையை விரும்புகின்றவனுடைய செல்வம் ஊரில் உள்ளாரெல்லாம் உண்கின்ற தண்ணீர் நிறைந்த ஊருணி போன்றது.

“ஊருணி” உண்ணும் நீரினையுடைய நீர்நிலை. இன்றும் இந்த வழக்கு உள்ளது.

உலகு தழுவிய வாழ்க்கையை விரும்புகின்றவர்கள் “நான்” “எனது” என்ற உணர்வுகளைக் கடந்தவர்கள். அதன் காரணமாக அவர்தம் செல்வம் ஊருணி போன்றதாயிற்று. ஊருணி ஊராருக்குப் பயன்படுவதன்மூலம் தனது தூய்மை,