பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஊற்றுவளன், நிலையாய் அமைதல் ஆகிய பயன்களையும் பெறுகின்றது; அதுபோலப் பிறருக்கும் குமுகாயத்திற்கும் பயன்பட வாழ்பவர்களும் பயனடைதல் இயற்கை என்பதை உணர்த்தியவாறு. “ஊருணி” உதவுவதில் ஊருணிக்கும் பயனுண்டு. ஊருணி ஒத்தவர் வழங்குவதில் உலகறிய வாழ்தல் முதலான பயன் பல விளையும்.

‘பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.’

216

நேர்மையாளனிடம் உள்ள செல்வம் பயன்படும் மரம் ஊர் நடுவே பழுத்தாற் போன்றது.

நேர்மைப் பாங்குடையவர் செல்வத்தின் பயன் ஈதல் என்பதை உணர்வர். ஆதலால் “நயனுடையான்" என வியந்து கூறினார்.

"பயன்மரம்” உள்ளூர்ப் பழுத்தற்று; விரும்புவார்க்கு எளிதில் பயன்படத் தக்க நிலையில் ஊருக்குள் பழுத்தமரம் என்பது கருத்து. சில செல்வர் உள்ளூரிலேயே இல்லாமல் நெடுந் தொலைவில் உள்ள நகரங்களில் போய் வாழ்வர். இது உள்ளூராரிடமிருந்து தப்பித்தலுக்கே என்று எண்ணுவதில் தவறில்லை.

பயன்படு மரங்கள் பயன்படு நிலையில் உரிமையுள்ளவை. விருப்பு-வெறுப்பு ஆகியவற்றிற்கு இடமில்லை என்பது உண்மை. அதுபோல நயனுடையார் விருப்பு-வெறுப்புகளுக்கு அப்பால் நின்று வாழ்வர்.

விருப்பு-வெறுப்புகளின்றி அனைவரும் பயனுறத் தக்க வகையில் வாழ்க.

‘மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.’

217

பெருந்தகையாளனிடம் சேரும் செல்வம் தப்பாது பயன்படும் மருந்து மரம் அணையது.