பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அணிந்துரை
டாக்டர் வா.செ. குழந்தைசாமி

திருக்குறள் வகுப்பறையில் பாடமாகவும், அறிஞர்கள் மன்றில் விவாதப் பொருளாகவுமே நீண்ட காலம் இருந்து வந்திருக்கிறது. ‘வாழ்வியல் நூல்’ என்ற அணுகு முறையொடு அதை யாரும் மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்லவில்லை. சைவர். வைணவர், சமணர் போன்ற ஒவ்வொரு சமயத்தினரும் கொண்டாடினாலும் அடிப்படையில் சமயச் சார்பற்ற அந்நூலின்மீது சமய அடிப்படையில் எந்தச் சமயத்தினரும் ஆழ்ந்த ஈடுபாடு காட்டவில்லை. தேவாரம் போலவோ, திவ்வியப் பிரபந்தம் போலவோ குறள் சொற்பொழிவுப் பொருளானதில்லை. சமய உலகத்தவருள், குறளை மக்கள் மன்றத்திற்கு முதன் முதலாக எடுத்துச் சென்றவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்தான்.

பெரும்பாலும் குறளை ஒரு நீதி நூலாக மட்டுமே தமிழறிஞர்கள் பார்த்து வந்தனர். ஆங்காங்கு சில குறள்களில் அவர்கள் இலக்கிய நயம் காண்பதுண்டு. ஆனால் குறள் தமிழர் தம் தத்துவப் பார்வையைப் பிரதிபலிக்கும் வாழ்வியல் நூல் என்பது அவ்வளவாக உணரப்படவில்லை; மக்கட்கு உணர்த்தப்பட வில்லை. "திருக்குறள் சமயம் கடந்த வாழ்வியல் நூல்; தமிழ்ச் சமுதாயத்தினர் தங்கள் வாழ்க்கையை அதன் எல்லாக் கட்டங்களிலும் நெறிப்படுத்திக் கொள்ள உதவும் வழிகாட்டி - என்ற பிரகடனத்தைத் தோளில் சுமந்து கொண்டு கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழகத்தில் வலம் வந்தவர்; பின்னர் இப்பணியில் ஈடுபட்டுள்ளோர்க்கு முன்னோடியாக இருந்தவர் தவத்திரு அடிகளார்தான். இயற்கையாகவே அடிகளாருக்கு அமைந்திருந்த x-கதிர் (X-ray) போன்ற பார்வை, ஒவ்வொரு பொருளிலும் உள் நுழைந்து உண்மை தேடும் அணுகுமுறை, திருக்குறளின் அடிப்படைக்கு ஏற்றதாக, ஒத்ததாக இருந்தன. எனவே குறளின் அகலமும் ஆழமும் கொண்ட கருத்துகள் விரிந்து அவர் பார்வையின் முன் பரந்த வானில் முழுப் பிரகாசத்தொடு ஒளிவீசும் தாரகைகள்போல விளங்கி நின்றன.

குறள் மக்கள் இலக்கியமாக மலரவில்லை: ஆனால் அறிஞர்கள் மத்தியில் தொடர்ந்து பயிலப்பட்டு வந்த நூல். பல உரைகள் கண்ட நூல். பல மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பெருமையுடைய நூல். இவ்வளவு நீண்ட கால, ஆழ்ந்த ஆய்வுக்குப் பின்னரும் பல குறள்கட்கு அடிகளார் முந்தையவர்களினின்றும் வேறுபட்ட விளக்கங்களைக் காண்கிறார். அவரது ஒவ்வொரு விளக்கமும் குறளின் வாழ்வியல் கூறுபாட்டை மேலும் கூர்மையுடைய தாக்குகிறது. குறள் வழி நிற்பதற்கு வழி காட்டுகிறது. சில சான்றுகள் பார்ப்பது பொருந்தும்.

அழுக்காறு விலக்கப்பட வேண்டிய உணர்ச்சி. அழுக்காறாமை என வள்ளுவர் ஒரு அதிகாரமே வைத்திருக்கிறார்.