பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



137



எந்தச் சூழ்நிலையிலும் கொள்ளுதல் தீது; கொடுப்பதே நன்று.

கொடுத்தலைத் தாழ்த்தியும் கொள்ளுதலை உயர்த்தியும் அறநூல் கூறுமானால் அஃது அறநூலன்று. அது பொய்ம்மையான சாத்திரம் என்று அறிக.

இது பிறர் மதம் மறுத்தது. வாங்குதலின் மூலம் இந்த உலகத்தில் நாட்டுத் தேவராகவும் மறுமை உலகத்தில் தேவராகவும் ஆகி வாழுகின்ற பிறர் மதம் மறுத்துத் தமிழ்மரபு நிலை நிறுத்தியமையை அறிந்து இன்புறுக.

ஈகை அறத்தைச் செய்தல் மூலம் இந்த உலக வாழ்க்கையில் நல்லுறவும் அமைதியும் இருக்கும். இஃது உடனடியான தேவை. ஆதலால், “மேலுலகு இல்லெனினும் ஈதலே நன்று” என்றார்.

இந்த உலக வாழ்க்கை அனைத்துத் துறையிலும் சீருடையதாக அமையின் மேலுலகம் கிடைத்தே தீரும், அதை இல்லை என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது.


‘இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள.’

223

ஒருவன் தான் ஏழை என்று தனது ஏழ்மையை வெளிப்படையாக மானம் போகிற வகையில் சொல்லிக் கேட்பதற்கு முன்பே அவன் வறுமையினை அறிந்து ஈதல் செய்யும் சிறந்த குணம் உயர்குடிப் பிறப்பாளரிடம் உண்டு.

“இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்” என்பதற்கு ஒருவருடைய ஏழ்மையை மற்றவர்களிடம் கூறி, மானக்கேட்டிற்கு ஆளாக்காமல் அவர்தம் வறுமையை விளம்பரப்படுத்தாமல் மறைத்து உதவி செய்யும் பெருங்குணம் உயர்குடிப் பிறர்ந்தார் கண்ணே உண்டு என்னும் பொருள் கொள்வர்.