பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



1. வறுமையின் கீழ்மையை உணர்வோர் மானத்திற்கு அஞ்சி எளிதில் சென்று இரக்க மாட்டார். அதனால், வறுமையால் இறத்தலும் நிகழ்தல் கூடும். இதனைத் தவிர்க்க வறுமையுற்றோர் இரந்து கேட்கட்டும் என்று எதிர்பார்க்காமல் வலியச் சென்று உதவி செய்தலே உயர்குடிப் பிறப்பின் இலக்கணம்.

2. ஒருவரின் வறுமையை மற்றவர்களிடம் எடுத்துக் கூறி இழிவை உண்டாக்காமல் வறுமையுற்றோர் தகுதி குறைவுபடாமல் கொடுத்து உதவும் பண்பு உயர்குடிப் பிறந்தார்களிடம் உண்டு.

3. வறுமை வாய்ப்பட்டு வருந்துவோரின் வறுமைத் துன்பத்தை முற்றாக நீக்கக் கூடிய வகையில் உதவி செய்வதே ஈதல். இங்ஙனம் ஈதல் மேற்கொள்ளும் பண்பு. உயர்குடிப் பிறந்தாருக்கே உண்டு.

4. ஒருவரின் துன்பத்தை - வறுமைத் துன்பத்தை முற்றாக நீக்கப் பயன்படாத ஈகை, வறுமையொடுபட்ட ஈகையாகும். இத்தகு வறுமையொடுபட்ட ஈகை யாற்றலால் பயன் இல்லை.

5. "எவ்வம் உரையாமை ஈதல்" என்றதால் வறுமைக்குக் காரணம் குமுகாய நடைமுறையின் குறைபாடுகளே என்ற கருத்து உய்த்துணரக் கூடியது.

6. "குலனுடையான் கண்ணேயுள” என்றதால் உயர் குடிப் பிறப்பின் தன்மை ஈகை ஒன்றாலேயே அறியப்படும்.

வேறு காரணங்களால் உயர்குடிப் பிறப்புரிமை கொண்டாடுதல் அறமன்று.

‘இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.’

224