பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



141


மட்டுமன்று; வளர்த்துக் கொண்டு அறம் செய்யும் முறை. ஆதலால் தேசிய சேமிப்புப் பத்திரங்களில் இடுக.

‘பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.’

227

பகுத்து உண்ணப் பயின்றவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டுதல் இல்லை.

ஒருவரிடத்தில் உள்ள எல்லா நன்மைகளையும் கொன்று தீமையைச் செய்து பிணி முதலியவற்றை வரவழைத்துத் தருதலால் “தீப்பிணி” என்றார்.

பலரோடும் பகுத்துண்க; அங்ஙனம் பகுத்துண்பதால் இவரோடு பலர் பகுத்துண்ணக் காத்திருப்பர். ஆதலால், பசிப்பிணி தீண்டல் அரிது; அணுகாது.

‘ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.’

228

உடைமைகளை வைத்து இழக்கும் அருளிலாதார், வறியார்க்கு ஒன்று ஈத்துவக்கும் இன்பத்தினை அறியமாட்டாதார் போலும்!

வறுமையுடையோர் வறுமைத் துன்பத்தை நீக்கிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழும்பொழுது அவர்தம் மலர்ந்த முகத்தைக்கண்டு உவத்தலே சான்றோர் செயல்.

‘இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.’

229

ஒருவருக்குப் பிறர்பால் சென்று இரத்தல் துன்பமானது; ஆனால், இதனினும் துன்பம் தருவது வறுமையுடையோருக்கு உதவாது தாமே தனியே உண்டல்.

1. இரத்தல் துன்பமானது, இத்துன்பம் வரும் வாழ்க்கையில் வாழற்க! அதாவது பொருள் செயல் முயற்சியில், ஈடுபட்டுப் பொருள் ஈட்டுக.