பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழுக்காறாமை எனும் பண்பை அடைதல் எவ்வண்ணம் என்னும் கேள்வியை எழுப்பி, அடிகளார் ஏறத்தாழக் கணிதச் சூத்திரம்போல் சுருக்கமாகப் பதில் சொல்கிறார்:

‘மற்றவர்கள் வாழத் தம் வாழ்க்கையின் தேவைகளைக் கூட விட்டுக் கொடுத்தல்; குறிப்பாகச் சொன்னால் ‘வாழ்தலை விட வாழ்வித்தலில் ஆர்வம் காட்டுதல்’. (21)

என்கிறார். நாம் வாழ்க்கையில் கடமைகள் பற்றிப் பல வகையான வழியில் கருத்துக் கூறுகிறோம். கடமைகளை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு அடிகளார் கூறும் தத்துவம்,

கடமைகளும் பொறுப்புகளும் சுமைகள் அல்ல; அவை மாந்தனை வளர்க்கும் வாயில்கள் (24).

எனவே நமது நலனுக்காகவும் நாம் கடமைகளைச் செய்ய வேண்டும்.

வள்ளுவரின் வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரம் பற்றிப் பேசும் பொழுது ‘வாழ்க்கைத் துணை’ என்ற சொல்லே, அவர்கட்குச் சம உரிமை வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கியிருக்கிறது எனப் பொருள் காண்கிறார்.

துணையாக அமைவது: எல்லா வகையாலும் தம் அளவுக்கு வளர்ந்ததாக, தம்மினும் கூட வலிமை சார்ந்ததாக அமைந்தால்தான் துணையாக அமைய முடியும். இதனால் பெண்கட்குக் கல்வி முதலிய உரிமைகளும் சம நிலைப் பாங்கும் வேண்டும் என்று கூறியதாயிற்று (32).

என்கிறார். பெண்கள் சமத்துவத்திற்கு அடிகளாரைப் பொருத்தவரை, நீண்ட வாதம் தேவைப்படவில்லை. ஆண் மகன் தனது நலன் கருதியே சமநிலையை ஏற்க வேண்டும் என்கிறார் (32).

'கற்பு’ என்பது தமிழ்ப் பண்பாட்டைப் பொருத்தவரை மிக முக்கியமான இடம் பெற்றுள்ள சொல். 'கற்புடைப் பெண்டிர் பிறர் மனம் புகார்’ என்பதில் இருந்து 'கற்பெனப்படுவது அறம்திறம்பாமை’ என்பது வரை கற்புக்கு வகுக்கப்பட்டுள்ள இலக்கண வரைவுகள் பல. ஆனால் அடிகளார்

காதலர்களிடையே நிலவ வேண்டிய மாறாத அன்பைக் கற்பு என்று சிறப்பித்துக் கூறுதல் மரபு

என்று கூறி, வாழ்வில் அது இன்றியமையாத தேவை என்பதாக்கி மேலும் அது இருவருக்கும் பொது என்பதையும் உறுதிப்படுத்தி விடுகிறார் (36).

தெய்வம் தொழாஅள்; கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

என்ற குறள் வாதத்திற்குரிய ஒன்றாக இருந்து வருகிறது. பெண்ணியவாதிகள் அதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். பெண்களை அடிமைப்படுத்தும் வாக்கு என்கிறார்கள். இக்குறளுக்கு அடிகளார் பின்வருமாறு பொருள் காண்கிறார்.

உறக்கத்தில் இல்லாளுக்கு உணர்வு இல்லை. உறக்கம் தெளிந்தவுடன், உணர்வுகள் திரும்பியவுடன் தன் தலைவனை, கணவனை நெஞ்சத்தால் தொழுது, வாழ்த்தி எழுதல் வேண்டும்.