பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இந்த உலகில் காண்பன, நுகர்வன, அனைத்தும் நம்மை விட்டு நீங்கும்; ஆயினும் பெறுகிற புகழ்மட்டும் அழியாது; மாறாது.

"உயர்ந்த புகழ்" என்றது ஓருயிரை ஓருடம்பிடையில் நிறுத்தி வைத்து வாழவைப்பது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய இறை செய்யும் ஐந்தொழில்களைப் போல அமைந்து விடுதலின் உயர்ந்த புகழாகும்.

பசியால் வருந்தி அழியாது காத்தலால் காத்தலும் படைத்தலுக்கு ஒப்பாகும் இயல்பிலே காத்தல் நிகழ்கிறது.

ஒருவனின் வறுமைத் துன்பமும் இழிவும் மற்றவர்க்குப் புலனாகாமல் உதவி செய்யப் பெறலால் மறைத்தல் நிகழ்கிறது.

மனித குலத்திற்குத் தீமையானவற்றை அழித்தலால் அழித்தல் தொழில் வந்தமைகிறது.

மகவெனப் பல்லுயிரும் ஒக்கப் பார்த்து வேறுபாடு கருதாமல் வாழ்வித்தல் அருளல் ஆகிறது.

‘நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.’

234

ஒருவன் இந்நிலவுலகத்தில் புகழ்பட வாழின் தேவருலகம் தேவரைப் போற்றாது.

இம்மண்ணுலக வாழ்க்கையில் புகழ்பட வாழ்தல் என்பது அருமையுடைய வாழ்க்கை. இந்த அருமையுடைய வாழ்க்கை ஒருவரால் ஆற்றப்படுமெனின், புகழ்பட வாழ விருப்பமில்லாது வறிதே வாழும் தேவர்களைத் தேவருலகம் பாராட்டாது.

புகழ் என்பது ஒருவர் புகழ்வதனால் வருவதன்று; நிலைத்த செயல்களைச் செய்தலின் மூலம் வருவதே புகழ்.