பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



149



ஒருவன் ஈட்டும் பொருள் முதலியன அவனுக்குப் பின் அவன் பெயரில் நிற்பனவல்ல. ஆனால் அவனீட்டிய புகழ் அவனுக்கே சொந்தமாகத் தொடர்ந்து நிலைத்து நிற்கும். அவனைச் சார்ந்தோருக்கும் உதவி செய்யும்.

ஆதலால், நாள்தோறும் புகழ்பெறத் தக்க நிலையான செயல்களைச் செய்திடுக.

‘வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.’

239

புகழைச் செய்யாத உடம்பைச் சுமந்த நிலத்தில் பழிப்பில்லாத வளமுள்ள விளைச்சல் குறையும்.

நிலத்திற்கும் உயிருண்டு போலும்; நிலம் புகழத்தக்க செயல்களைச் செய்வாரோடு உறவு கொள்ளும்போது பழிப்பில்லாத வளமுள்ள பயனை வழங்குகிறது. அங்ஙனமின்றிப் புகழற்ற உடம்புகளை நிலம் தாங்கும் பொழுது புழுக்கத்தினால் வெப்பமடைந்து வளம் குன்றிப் பயனற்றுப் போகிறது.

ஆதலால், புகழ்பெறும் வாழ்க்கையே வாழ்க! இயலா தொழியின் வசை பெறாமலாவது வாழக் கற்றுக் கொள்க!

‘வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.’

240

தமக்குப் பழிப்பில்லாமல் வாழ்பவரே உயிர்வாழ்பவராவர்; புகழின்றி வாழ்பவரே உயிரோடிருந்தும் இறந்தவராவர்.

வாழ்தலுக்கும் சாதலுக்கும் இடையிலுள்ள வேறுபாடு உண்ணல், உறங்கல் அல்ல; புகழும் இகழுமேயாம்.

நாள்தோறும் புகழினைத் தரும் புண்ணியச் செயல்களைப் போற்றிச் செய்திடுக; மறந்தும் வசையினைத்